பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப் கட்சி அழைப்பு: பேச்சுவார்த்தை இன்று தொடக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப்-ன் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) அழைப்பு விடுத்துள்ள நிலையில் அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் மக்கள் கட்சி, பிஎம்எல்(க்யூ) ஆகியவை முன்வந்துள்ளன.

பாகிஸ்தான் தேசிய அவைக்கு 266 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 8-ம் தேதி நடைபெற்றட்து. இதில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதால் அக்கட்சியினர் சுயேட்சையாக போட்டியிட்டனர். அவர்கள் 101 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். முன்னாள் பிரதர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும், எம்க்யூஎம் கட்சி 17 இடங்களிலும், பிஎம்எல்(க்யூ) கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் தவிர்த்த மற்றவர்கள் அனைவரையும் இணைத்து கூட்டணி ஆட்சி அமைக்க பிஎம்எல்(நவாஸ்) கட்சி அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் பதவியையும் நிதி அமைச்சர் பதவியையும் தன் வசம் வைத்துக்கொள்ள பிஎம்எல்(நவாஸ்) விரும்புவதாகவும், பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு அதிபர் பதவி மற்றும் சபாநாயகர் பதவி ஆகியவற்றை வழங்க தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மற்ற கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி, அமைச்சர் பதவி ஆகியவற்றை வழங்க பிஎம்எல்(நவாஸ்) கட்சி விருப்பமாக உள்ளது.

பிலாவல் பூட்டோவை பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தி பாகிஸ்தான் மக்கள் கட்சி இந்த தேர்தலை எதிர்கொண்டது. எனவே, அக்கட்சி பிரதமர் பதவியைப் பெற விரும்புவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எனினும், 3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் இம்முறை மீண்டும் பிரதமராக திட்டமிட்டு வருகிறார்.

இந்நிலையில், பிஎம்எல்(நவாஸ்) கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைத்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி, இன்று பேச்சுவார்த்தையை முறைப்படி தொடங்க உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *