சபாநாயகர் இந்த வார்த்தைகளை பேசாமல் இருந்திருந்தால் ஆளுநர் முழுவதுமாக இருந்திருப்பார் : நயினார் நாகேந்திரன்..!

இன்று நடைபெற்ற சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். அவையில் சில நிமிடங்கள் அவர் பேசிய விவரம் வெளியாகியுள்ளது. அதில் அனைவருக்கும் வணக்கம், என தமிழில் கூறி ஆளுநர் ஆர்.என். ரவி, தனது உரையை தொடங்கினார். பின்னர். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் தொடக்க உரையை இந்த அவையில் நிகழ்த்துவதை எனக்கு கிடைத்த கவுரவமாக எடுத்துக் கொள்கிறேன். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் . இந்த புது வருடம் அனைவருக்கும் மகிழ்சியை கொடுக்கட்டும் என்றார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த இந்த அரசின் நோக்கங்களை திருவள்ளுவரின் குறள் ஒன்றை குறிப்பிட்டு உரையை தொடங்குகிறேன். “பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து”, மக்களுக்கு நோயற்ற வாழ்வு, அதிக விளைச்சல், பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு. நான் திரும்பத் திரும்ப விடுக்கும் கோரிக்கையும், அறிவுரையும் இதுதான். தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்து தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும். அரசின் உரையில் பல பத்திகள் உள்ளன. உண்மையின் அடிப்படையிலும் தார்மீக அடிப்படையில் இந்த உரையுடன் நான் உடன்படவில்லை, எனவே இந்த உரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் ஹிந்த், ஜெய் பாரத், நன்றி என்று கூறி தனது உரையை முடித்தார்.

முன்னதாக தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்திருந்தாலும் தொடர்ந்து ஆளுநர் அவையிலேயே அமர்ந்திருந்தார். ஆளுநர் உரையை புறக்கணிந்திருந்த நிலையில் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு படித்தார். ஆளுநர் உரையின் தமிழாக்கம் முடிந்த உடன், அவை முன்னவர் துரைமுருகன் அறிக்கைக்கு முன்னும், தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நகேந்திரன், ஆளுநர் மரபு படியே தான் செயல்பட்டார். ஆளுநர் கூறிய திருத்தங்களை சபாநாயகர் ஏற்கவில்லை. சபாநாயகர் நடந்து கொண்ட விதம் தான் மரபுக்கு எதிரானது.சபாநாயகர் மரபுக்கு மீறி தேவையற்ற விஷயங்களை பேசியதால் ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார். தேசிய கீதத்தை முதலில் பாடுவது தவறில்லை என்றார்.

சவர்க்கர் மற்றும் கோட்சே வார்த்தைகளை பயன்படுத்தி சபாநாயகர் சபையில் இல்லாத மரபுகளை செய்திருக்கிறார். புதிதாக அறிமுகம் செய்கிறார். சபாநாயகர் பேச்சை கண்டித்து பாஜக வெளிநடப்பு செய்திருக்க முடியும். முறைப்படி நடக்கின்ற கூட்டம் என்பதால் வெளிநடப்பு செய்யவில்லை. எனினும், சவர்க்கர் மற்றும் கோட்சே பெயரை குறிப்பிட்டு பேசியதை பாஜக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சபாநாயகர் சவர்க்கர் மற்றும் கோட்சே வார்த்தைகளை பயன்படுத்தியதாலும், சபை மரபை மீறி நிதி தொடர்பான கோரிக்கை வைத்ததன் காரணமாக ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.

அரசின் உரையை முழுமையாக வாசித்து முடித்தபின் தேவையில்லாத வார்த்தைகளை பேசியதால் தான் ஆளுநர் எழுந்து சென்றார். சபாநாயகர் இந்த வார்த்தைகளை பேசாமல் இருந்திருந்தால் ஆளுநர் முழுவதுமாக இருந்திருப்பார். ஆளுநர் உரையில் வெள்ளம் குறித்து பேசியிருந்தும், உரை முடிந்த பின் தேவையில்லாமல் பேசியதால்தான் முரண்பாடு.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *