சிஎஸ்கே அணியுடன் இணையும் கத்ரினா கைஃப்.. ஜெர்சி மாற்றத்திற்கு பின் நடந்த ட்விஸ்ட்.. காரணமே இதுதான்!
சிஎஸ்கே அணியின் விளம்பர தூதராக பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடருக்கு முன்பாக வீரர்களுக்கான பயிற்சி முகாம், விளம்பர ஒப்பந்தங்கள், விளம்பர படப்பிடிப்புகள், ஜெர்சி அறிமுகம் உள்ளிட்டவை குறித்து அணி நிர்வாகங்கள் திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் சிஎஸ்கே அணி சில நாட்களுக்கு முன் புதிய ஜெர்சியை வெளியிட்டது.
16 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் டைட்டில் ஸ்பான்சராக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் இருந்து வந்தது. ஆனால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரப்பூர்வ விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் புதிய ஜெர்சி அறிமுக விழா சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.
சிஎஸ்கே வீரர்களான தீபக் சஹர், முகேஷ் சவுத்ரி, ஹங்கர்கேகர், சிமர்ஜித் சிங் உள்ளிட்டோர் பங்கேற்று புதிய ஜெர்சியை அறிமுகம் செய்தனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணி தரப்பில் மற்றொரு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சிஎஸ்கே அணியின் விளம்பர தூதராக பாலிவுட் நடிகைன் கத்ரினா கைஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக கத்ரினா கைஃப் செயல்பட்டு வருகிறார். இதன் மூலமாக சிஎஸ்கே அணியில் கத்ரினாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிஎஸ்கே அணி வீரர்கள் பங்கேற்கும் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவன விளம்பரங்களில் கத்ரினா கைஃபும் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் நடிகர் விஜய் சிஎஸ்கே அணியின் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பின் சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய விளம்பர தூதராக தோனியே இருந்து வந்தார். தற்போது டைட்டில் ஸ்பான்சராக உள்ள எதிஹாட் ஏர்வேஸ் மூலமாக கத்ரினா கைஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.