அரசியல் ஆஃபர் வந்துருக்கு.. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.. சவுரப் திவாரி அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜார்க்கண்ட் வீரர் சவுரப் திவாரி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு யு19 உலகக்கோப்பையை வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் இடம்பிடித்தவர் சவுரப் திவாரி. அதன்பின் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட சவுரப் திவாரி, நீண்ட தலைமுடியை கொண்ட ஹேர் ஸ்டைலுடன் தோனியின் ஜெராக்ஸாக அறியப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், தோனிக்கு நிகரான வீரராக வருவார் என்று பார்க்கப்பட்டது.
அந்த 2011ஆம் ஆண்டு மும்பை அணிக்காக ஆடிய சவுரப் திவாரி 16 போட்டிகளில் விளையாடி 419 ரன்களை விளாசினார். இதனையடுத்து பெங்களூரு அணியால் 2012ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ரூ.7.36 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால் பேட்டிங்கில் பெரியளவில் சோபிக்காத நிலையில், 2016ஆம் ஆண்டு தோனி தலைமையிலான புனே அணிக்காக விளையாடினார்.
அதன் சவுரப் திவாரியால் பெரியளவில் சோபிக்க முடியாத நிலையில், உள்ளூர் கிரிக்கெட்டில் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி வந்தார். இதுவரை 115 போட்டிகளில் விளையாடியுள்ள சவுரப் திவாரி, 22 சதங்கள் மற்றும் 34 அரைசதங்கள் உட்பட 8,030 ரன்களை விளாசி இருக்கிறார். அதேபோல் 93 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சவுரப் திவாரி, 1,494 ரன்களை விளாசியுள்ளார். இந்திய அணிக்காக 3 ஒருநாள் போட்டிகளிலும் சவுரப் திவாரி விளையாடி இருக்கிறார்.
இந்த நிலையில் 34 வயதாகும் சவுரப் திவாரி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து சவுரப் திவாரி பேசுகையில், எனது மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக ஓய்வு முடிவை நான் எடுக்கவில்லை. கடந்த ரஞ்சி டிராபி தொடரில் மிகச்சிறந்த ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறேன். எப்போது என்னிடம் அடுத்தது என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டு கொண்டே இருக்கிறது. ஆனால் கிரிக்கெட்டை கடந்து வேறு எதுவும் எனக்கு தெரியாது.
பள்ளி கல்விக்கு முன்பாகவே கிரிக்கெட் விளையாட தொடங்கிவிட்டேன். அதனால் எந்த சூழலிலும் கிரிக்கெட் தொடர்பாகவே இயங்குவேன். அரசியலில் ஈடுபட வேண்டும் என்று கட்சிகள் தரப்பில் அணுகி இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதுதான் ஓய்வு பெறுவதற்கு சரியான் நேரமாக கருதுகிறேன். தேசிய அணி அல்லது ஐபிஎல் அணியில் இல்லையென்றால் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவது நல்லது என்று கூறியுள்ளார். இந்த ரஞ்சி டிராபி தொடருடன் சவுரவ் திவாரி ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.