தமிழ்நாட்டின் USP இதுதாங்க.. குஜராத் முதல் கர்நாடகா வரை பொறாமைப்படும் வெற்றி..! #EV
இந்தியா முழுவதும் இருக்கும் மாநிலங்கள் எப்படியாவது எலக்டரிக் வாகன தயாரிப்பில் முதலீடுகளையும், நிறுவனங்களையும் பெற வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் போராடி வரும் வேளையில் தமிழ்நாடு அனைத்து மாநிலங்களுக்கு முன்னோடியாக இத்துறையில் முடிசூடா மன்னனாக உள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார், பைக் ஆகியவற்றின் நாட்டின் மொத்த தயாரிப்பில் சுமார் 40 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து தயாராகும் அளவுக்கு மாநிலத்தின் ஈவி துறை உள்ளது. இதில் குறிப்பாக எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பில் தமிழ்நாட்டின் பங்கீடு சுமார் 70 சதவீதமாகும்.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் எலக்ட்ரிக் வாகன (EV) துறையின் மதிப்பீடு குறித்து ஒரு ஆய்வு செய்யப்பட்டது. இதன் படி 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் EV தொழில்துறை மதிப்பு மட்டுமே சுமார் 40 பில்லியன் டாலரை தொடும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டை எட்டும் இலக்கை கொண்டு தமிழ்நாடு அரசு இயங்கி வரும் வேளையில், இதில் 4 சதவீதம் அதாவது 40 பில்லியன் டாலர் 3.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டை இந்த ஒரு துறை அளிக்கிறது.
ஆனால் இத்தகைய வளர்ச்சியை அடைய EV துறையில் ஒட்டுமொத்த எகோசிஸ்டத்தையும் அடைய வேண்டும். அதாவது எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியைத் தாண்டி அதன் உதிரிபாகங்கள், மூலப்பொருள், இயந்திரங்கள், கருவிகள், சோதனைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற அனைத்திலும் இதன் வாய்ப்புகளைத் தேடிப்பிடிக்க வேண்டும்.
EV உதிரிபாகங்கள், EV பேட்டரிகள், EV எலக்ட்ரானிக்ஸ் கருவிகள், EV மோட்டார், EV டெலிமாடிக்ஸ் மற்றும் EV மென்பொருள் ஆகியவற்றில் மட்டுமே சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் உள்ளது.
எலக்ட்ரிக் வாகன துறையில் தற்போது தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியமான தேவையாக இருப்பது மூலப்பொருள், செல் இரசாயனங்கள், மின் எஃகு மற்றும் காந்தங்கள், செமிகண்டக்டர், PCB, அலுமினியம் மற்றும் தாமிரம் ஆகியவை முக்கியமானவையாகும். இத்துறையில் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
R&D எனப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளை பொறுத்தவரை, EV துறையில் இந்தியாவின் ஒட்டுமொத்த R&D பங்கீடாக 2023ல் 5 பில்லியன் டாலரில் இருந்து 2030ல் 16 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உள்ளூர்மயமாக்கல் இப்போது 20% இலிருந்து 60% ஆக இருக்கும்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் தமிழ்நாட்டின் பங்கீடு 2030ல் 3 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கும், இதன் மூலம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சந்தையில் தமிழ்நாடு 25 சதவீத பங்கீட்டை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே R&D கட்டமைப்பை ஃபோர்டு, ரெனால்ட் நிசான், மஹிந்திரா ஆகியவை ICE வாகனங்களுக்காக உருவாக்கியுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களின் எழுச்சிக்கு பின்பு பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தமிழ்நாட்டைத் தங்களுடைய R&D HUB ஆக மாற்றியுள்ளனர்.
EV வல்லுநர்கள் கருத்தின் படி தமிழ்நாட்டின் மிகப்பெரிய USP என்றால் அது சுற்றுச்சூழல் சார்ந்த வர்த்தக வாய்ப்புகளை முன்னோக்கிச் சிந்திப்பது தான். இதன் விளைவாக இந்தியாவின் EV HUB ஆகத் தமிழ்நாடு விளங்குகிறது, இந்தத் துறையோடு நிற்காமல் காற்றாலை, சோலார் எனப் பல துறையில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.