மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்.. விலைவாசி குறைந்தது..!!
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் வருடாந்திர அடிப்படையில் 5.10 சதவீதமாகக் குறைந்துள்ளது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குச் சாதகமாக அமைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் இதன் அளவு நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.69 சதவீதமாக இருந்தது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஜனவரி மாத பணவீக்கம் 5.10 சதவீதம் என்ற குறைவான அளவீட்டில் இருந்தாலும், இந்த அளவீடு இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) 2-6 சதவீத சகிப்புத்தன்மை வரம்பிற்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பணவீக்கம் மற்றும் நாணய புழக்கத்தைத் தனது இருமாத நாணய கொள்கை மூலம் கட்டுப்படுத்தி வரும் ஆர்பிஐ, கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் நாணய கொள்கை குழு 5:1 வாக்குகள் மூலம் ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமுமில்லை என அறிவித்தது.
இதன் மூலம் தற்போது நாட்டின் பென்ச்மார்க் விகிதமான ரெப்போ விகிதம் 6.5 சதவீத அளவீடு அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தொடரும் எனச் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். இதேபோல் அடுத்த வட்டி விகித குறைப்பு ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத கூட்டத்தில் நடக்க வாய்ப்பு உள்ளதாகச் சந்தை ஆய்வுகள் கூறுகிறது.
இந்த நிலையில் ஜனவரி மாத பணவீக்க தரவுகளில் நாட்டின் மொத்த சில்லறை விலை பணவீக்கம் 5.10 சதவீதமாக இருந்த நிலையில், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பணவீக்க விகிதம் 5.34 சதவீதம், 4.92 சதவீதமாக இருந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே ஜனவரி மாதத்தில் 5.93 சதவீதம் மற்றும் 5.46 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சில்லறை விலை பணவீக்கத்தில் திடீர் சரிவு உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்றப்பட்ட சரிவு காரணமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. டிசம்பர் மாதம் பதிவான 9.53 சதவீத உணவுப் பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 8.30 சதவீதமாகக் குறைந்துள்ளது. ரீடைல் பணவீக்கத்தில் பெரும் பங்கீட்டை உணவு பணவீக்கம் கொண்டு உள்ளது.
காய்கறி பணவீக்கம் டிசம்பர் மாதம் 27.64 சதவீதத்திலிருந்து 27.03 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதோடு எரிபொருள் மற்றும் மின்சாரப் பணவீக்கம் முந்தைய மாதத்தில் (-)0.99 சதவித அளவில் இருந்து தற்போது (-)0.60 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி அளவீடு IIP 2023 நவம்பர் மாதம் 2.4 சதவீதமாக இருந்த நிலையில் 2023 டிசம்பரில் 3.8 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) திங்களன்று வழங்கிய தரவுகள் தெரிவிக்கின்றன.
2022 டிசம்பரில் தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் (ஐஐபி) அடிப்படையில் தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி 5.1 சதவீதமாக இருந்தது என்று அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
2023-24 நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தின் நாட்டின் மொத்த ஐஐபி வளர்ச்சி 6.1 சதவீதமாக உள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 5.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நாட்டின் உற்பத்தி துறை வளர்ச்சி பாதையில் இருப்பது உணர்த்துகிறது.