மிகப்பெரிய இருக்கை கொண்ட Rizta எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஏதர் CEO பெருமிதம்..!
நாட்டில் எலெக்ட்ரிக் டூ வீலர் செக்மென்ட் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ஏதர் எனர்ஜி ரிஸ்டா (Rizta) என்ற ஃபேமிலி ஸ்கூட்டர் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
நாட்டின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான ஏதர் எனர்ஜி, வரவிருக்கும் அதன் ஃபேமிலி ஸ்கூட்டரான ரிஸ்டா பற்றிய டீஸர்களால் உற்சாகத்தை உருவாக்கி வருகிறது. இதற்கிடையே சமீபத்தில் ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தருண் மேத்தா, வரவிருக்கும் Rizta-வின் சீட்டை எலெக்ட்ரிக் டூ வீலர் செக்மென்ட்டில் இருக்கும் முன்னணி ஸ்கூட்டருடன் ஒப்பிட்டு தனது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார்.
அதில், Ola S1 உடன் ஒப்பிட்டு அதற்கான இமேஜை ஷேர் செய்துள்ளார். இரு ஸ்கூட்டர்களின் சீட்களை ஒப்பிட்டு காட்டும் இமேஜை பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல் இந்த செக்மென்ட்டில் தங்களது தயாரிப்பு மிகப்பெரிய சீட்டை கொண்டிருக்கிறது என்று தைரியமாக வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஏதர் எனர்ஜியை விரும்புபவர்கள் நிறைய பேர் ஆனால் எங்களிடமிருந்து பெரிய ஸ்கூட்டர் வர வேண்டும் என்பதையும் அவர்கள் விரும்புகிறார்கள். எனவே நாங்கள் எங்கள் குடும்ப ஸ்கூட்டரை வடிவமைக்கும்போது இதனை கருத்தில் கொண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார் தருண் மேத்தா. ஏதர் எனர்ஜியின் வரவிருக்கும் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பெரிய இருக்கை கொடுக்கப்பட்டிருப்பது சவாரி செய்ய, பின்சீட்டில் நபர்களை வசதியாக ஏற்றி செல்ல அல்லது சரக்குகளை ஏற்றி செல்ல மிகவும் வசதியானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. மேத்தா ஷேர் செய்திருக்கும் இமேஜில் காணப்படுவது போல், மற்ற சந்தை போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது வரவிருக்கும் Rizta மாடல் பரந்த அளவிலான சிங்கிள்-பீஸ் சீட்டை பெறுகிறது.
மேத்தா பகிர்ந்துள்ள ஸ்பை ஷாட்ஸ்களின்படி பார்த்தால் தினசரி பயணங்கள் அல்லது குடும்ப பயணங்களுக்கு ஏற்ற வசதியான அதே சமயம் ஃபங்ஷனல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்பும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவதை ஏதர் நோக்கமாக கொண்டிருப்பதை டிசைன் சாய்ஸ்கள் வெளிப்படுத்துகின்றன. மேலும் நிறுவனம் செக்மென்ட் ரீதியாக பெரிய சீட் டிசைனை அறிமுகப்படுத்த முக்கிய காரணம், ஏதர் 450 சீரிஸ் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக இடப்பற்றாக்குறை இருப்பதே என்று கருதப்படுகிறது.
வரவிருக்கும் Rizta மாடலின் செயல்திறன் விவரக்குறிப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும் இதில் புதிய பேட்டரி மற்றும் மோட்டார் கொடுக்கப்பட்டு மேம்பட்ட ரேஞ்ச் மற்றும் செயல்திறனை பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ரிஸ்டாவை அறிமுகப்படுத்தி ஏதர் எனர்ஜி தன்னை மார்க்கெட்டில் நிலைநிறுத்தி கொள்ள கூடும்.