இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி..!
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து மத கோவில் கும்பாபிஷேகம் நாளை (14ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.இதனை தொடர்ந்து அங்குள்ள சையீத் விளையாட்டு மைதானத்தில், ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.’அஹலான் மோடி’ அதாவது ‘வணக்கம் மோடி’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்க, எமிரேட்சின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 60,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
2015-ம் ஆண்டுக்குப் பிறகு மோடியின் ஏழாவது அமீரகப் பயணம் இதுவாகும். பிரதமர் மோடியும் அல் நஹ்யானும் இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டாண்மையை மேலும் ஆழமாக்குவது, வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வது ஆகியவை குறித்தும் விவாதிக்க இருக்கிறார்கள்.
பிரதமர் மோடியின் 2015-ம் ஆண்டின் வருகையுடன், அமீரகத்துக்கான இந்தியப் பிரதமரின் 34 ஆண்டு இடைவெளி முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு அன்றைய தினமே (14ம் தேதி) பிரதமர் மோடி கத்தார் செல்கிறார். கத்தால் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஷேக் தமீம் பின் அகமது அல்தானியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.