குட் நியூஸ்..! மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கல்விக்கடன் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி. மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் வரை கல்விக் கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தனிமனித வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் கல்வியின் பங்கு மிக முக்கியமானது என்பதாலும், தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி தற்போது கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக்கடன் உச்ச வரம்பினை ரூ.5 லட்சம் வரை உயர்த்தி வழங்க பின்வரும் நிபந்தனைகள்/ வழிமுறைகளுக்குட்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது.

கடன் வழங்கும் கூட்டுறவு நிறுவனங்கள் – தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மத்தியக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள்

கடன் வரம்பு – ரூ.1 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கலாம். ரூ.1,00,001/- முதல் ரூ.5,00,000/- வரை அளிக்கப்படும் கடனுக்கு 100% பிணையம் பெறப்பட வேண்டும். படிப்பிற்குண்டான டியூஷன் கட்டணம், தங்கும் விடுதி கட்டணம் மற்றும் உணவு கட்டணம், ஆய்வக கட்டணம், புத்தக கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை சேர்த்து கடன் வழங்கப்படும்.

வட்டி விகிதம் – கடனுக்கான வட்டி விகிதத்தினை அந்தந்த வங்கியில் உள்ள சொத்து பொறுப்புக் குழு மூலம் நிர்ணயம் செய்யப்படும். இணைப்புச் சங்கங்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை நிதியுதவி வழங்கும் வங்கி நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும், இணைப்புச் சங்கங்கள் (நகர கூட்டுறவு வங்கிகள் தவிர) இணைக்கப்பட்ட மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து கடன் பெற்று உறுப்பினர்களுக்கு இக்கடனை வழங்க வேண்டும்.

கடனை திருப்பி செலுத்தும் காலம் – கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 ஆண்டுகளுக்குள் கடனை முழுமையாக வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்.

மாணவர் தகுதி – இந்திய குடிமகன், 30 வயதுக்குள் இருக்க வேண்டும், தகுதி பெறும் படிப்புகள் – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் பட்டயப்படிப்புகள் (Diploma courses), தொழில்முறை படிப்புகள் உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்புகள் (UG Degrees including Professional courses), முதுகலைப் பட்டப் படிப்புகள் மாணவரின் பெற்றோர்(கள்) கட்டாயமாக இணை விண்ணப்பதாரராக (Co-applicant) சேர வேண்டும். திருமணமான மாணவர் என்றால் அவரின் கணவர்/மனைவி/மாமனார் /மாமியார் இணை விண்ணப்பதாரராக (Co-applicant) இருக்கலாம். ஒரு படிப்பின் அடுத்த ஆண்டுகளில் மாணவர்கள் கல்விக் கடனுக்கு வங்கி / சங்கத்தை அணுகினால், அம்மாணவர் வேறு எந்த வங்கியிலிருந்தும் /நிதி நிறுவனத்திலிருந்தும் ஆரம்ப ஆண்டுகளில் (initial years) கடன் பெறவில்லை என்பதை உறுதி செய்து தகுதியுடைய மாணவர்களுக்கு கடன் வழங்க பரிசீலிக்கலாம்.

இந்நேர்விலும், கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 ஆண்டுகளுக்குள் கடனை முழுமையாக வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். வங்கி விதிமுறைகளுக்குட்பட்டு பெறவேண்டிய ஆவணங்களைப் பெற்று கடன் பரிசீலிக்கப்பட வேண்டும். டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ மூலம் வழங்கப்படும் கல்விக் கடனுக்கு மேற்குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் பொருந்தும். இந்நேர்வில், இக்கடனுக்கான வட்டி விகிதம், நிறுவனம் வழங்கும் வட்டி விகிதத்தில் வழங்க வேண்டும். கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தப்படாதபட்சத்தில், கடனை வசூலிக்க இதர கடன்களுக்கு பின்பற்றப்படும் சட்டபூர்வ வழிமுறைகள் இக்கடனுக்கும் பொருந்தும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *