கவர்னர் உரையின் 13 முக்கிய அம்சங்கள்..!
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் உரையை கவர்னர் ஆர்.என்.ரவி படிக்கமால் 2 நிமிடங்களில் புறக்கணித்தார். உரையில் உள்ள பல அம்சங்களில் முரண்படுவதாக தெரிவித்த அவர், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத் என கூறி 2 நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டார். கவர்னர் படிக்காத உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
அந்த உரையில், “கடந்த பத்தாண்டுகளில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றல் மையமாக தமிழகம் உருவெடுத்துள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும், மக்கள்தொகையில் 6 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ள நமது மாநிலம், இந்தியாவின் பொருளாதாரத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்கினை அளிக்கிறது. 2022-23ஆம் ஆண்டில்,7.24 சதவீத நிலையான தேசிய வளர்ச்சி வீதத்தை விஞ்சி, நமது மாநிலத்தின் பொருளாதாரம் 8:19 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதே வேளையில்,சராசரி பணவீக்கத்தைப் பொறுத்தவரை, 2022-23 ஆம் ஆண்டில் நாட்டின் 6.65 சதவீத பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது, தமிழகத்தின் பணவீக்கம் 5.97 சதவீதமாக உள்ளது. நாட்டைவிட தமிழகம் வேகமாக வளர்ச்சியடைவதோடு, அதே காலகட்டத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் நமது மாநிலம் திறம்படச் செயல்பட்டு வருவதை இது மெய்ப்பிக்கிறது.
தமிழக முதல்வரின் சீரிய தலைமையின் கீழ், இந்த அரசின் அயராத முயற்சியின் விளைவாக, குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியினை தமிழகம் கண்டுள்ளது. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால், 2021-22-ம் ஆண்டில் நான்காம் இடத்திலிருந்த நமது மாநிலம், 2022-23-ம் ஆண்டில் நாட்டிலேயே முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. நிதி ஆயோக்கின் 2022ஆம் ஆண்டு ஏற்றுமதித் தயார்நிலைக் குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை விஞ்சி, நாட்டிலேயே முதல் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.
வலுவான பொருளாதாரம். சமூக இணக்கத் தன்மை மற்றும் மகத்தான மக்களாட்சி ஆகியவையே, நமது மாநிலம் தொடர்ந்து நாட்டிலேயே அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் முதல் முகவரியாகத் திகழ்வதற்கு வழிவகுக்கின்றன. கடந்த ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு அதற்கு ஒரு சான்றாகும்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, 14.54 லட்சம் நபர்களுக்கு நேரடி வேவேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முன் எப்போதும் இல்லாத அளவிலான, மொத்தம் 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்வதற்கு, சாதனை படைக்கும் வகையில் நிறுவனங்களுடன் தமிழக அரசு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. மேலும், இந்நிகழ்வில் தமிழக முதல்வர் 1டிரில்லியன் டாலர் தமிழ்நாடு பொருளாதாரம் குறித்த தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டார். இந்த உயரிய இலக்கை அடைவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நமது அரசு மேற்கொண்டு வருகிறது.
சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தும் என நம்புகிறோம். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் எதிர்கொண்ட மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறுகாணாத மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளால் மாநிலம் அடுத்தடுத்து இரண்டு பெரும் இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தது. மிக்ஜாம் புயலின் பாதிப்பில் இருந்து நமது மாநிலம் மீள்வதற்கு முன்னரே, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகியவை வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மிகவும் பாதிக்கப்பட்டன. இப்பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கணிசமான அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டு, உடைமைகளும் சேதமடைந்தன.
மக்களின் துயர் நீக்கும் பொருட்டு, தமிழக முதல்வர், 1487 கோடி ரூபாய் செலவில், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பேரிடரால் பாதிக்கப்பட்ட 24.25 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பல நிவாரண உதவிகளை அறிவித்தார். மேலும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெரிதும் சேதமடைந்த பகுதிகளில், பாதிக்கப்பட்ட 6.63 லட்சம் குடும்பங்களுக்கு ரொக்க நிவாரண உதவியாக தலா 6,000 ரூபாயும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சேதமடைந்த பகுதிகளிலுள்ள, பாதிக்கப்பட்ட சுமார் 14.31 லட்சம் குடும்பங்களுக்கு, தலா 1,000 ரூபாயும், 541 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என அறிவித்தார். இப்பேரழிவின் பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் வழங்கப்பட்ட இரண்டு விரிவான அறிக்கைகளின் அடிப்படையிலும் மத்திய அரசு அலுவலர் குழுவின்
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளுக்கு தனது பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்திருந்த மத்திய அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதுதவிர, மக்களுடன் முதல்வர், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணத் திட்டம், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்தும், இல்லம் தேடி கல்வி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடர்பான அரசின் சாதனைகள் குறித்து கவர்னர் உரையில் விவரிக்கப்பட்டுள்ளது.
கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்:
1) புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் எண்ணிக்கை அதிகரிப்பு.
2) குற்றச்செயல்களை தடுப்பதில் தமிழக அரசு சமரசம் இன்றி செயல்பட்டு வருகிறது.
3) ஜிஎஸ்டி வரியால் தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
4) ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதே அரசின் நோக்கம்.
5) குடியுரிமை திருத்த சட்டத்தை, தமிழ்நாட்டில் ஒருபோதும் அமல்படுத்தப்போவதில்லை என்பதில் அரசு உறுதி.
6) மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்த பிரதமருக்கு முதலமைச்சர் கோரிக்கை.
7) நாட்டிற்கே முன்னோடியாக காலை சிற்றுண்டி உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது.
8) மருத்துவ சுற்றுலாவில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்.
9) கிண்டியில் குறுகிய காலத்தில் 1000 படுக்கைகளுடன் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.
10) ரூ.218 கோடி செலவில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், தென் மாவட்ட மக்களுக்கு மிகுந்த பலன்.
11) முந்தைய ஆண்டுகளை விட 203 சதவீதம் அதிகமாக தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது.
12) ரூ.4,861 கோடி செலவில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
13) மீனவர்களின் நலனை பாதுகாக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.