அபுதாபியின் முதல் இந்துக்கோவில்…மத்திய கிழக்கு நாடுகளின் முதல் கற்கோவில் பற்றி இதெல்லாம் தெரியுமா?
தற்போது உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்கள், தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் ஆகியோரின் பெரும் முயற்சியாலும், தாராள நன்கொடையாலும் இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் மனித குலத்தை ஒன்றிணைக்கும் இடமாகவும், ஒற்றுமையை ஏற்படுத்தும் இடமாகவும் விளங்கும் என நம்பப்படுகிறது. இந்தியா மற்றும் அபுதாபி அரசுகளின் கூட்டு முயற்சியால் இந்த இந்துக் கோவில் அபுதாபியில் எழுப்பப்பட்டுள்ளது.
அபுதாபியின் முதல் இந்து கோவில் :
இஸ்லாமிய நாடான அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்துக்கோவிலான BAPS இந்துக் கோவில் பிப்ரவரி 14ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. அபுதாபியின் முதல் இந்துக் கோவில் என்ற பெருமையை தாண்டி, மத்திய கிழக்கு நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள இந்துக்களின் பாரம்பரிய முறையில் அமைக்கப்பட்டுள்ள முதல் கற்கோவில் என்ற பெருமையையும் இந்த கோவில் பெற்றுள்ளது. பிரம்மிக்க வைக்கும் இந்த பிரம்மாண்ட கோவிலில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
பாப்ஸ் இந்துக் கோவிலின் சிறப்பு அம்சங்கள் :
* அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பாப்ஸ் இந்துக் கோவில், பிங்க் நிற ராஜஸ்தான் மணல்கற்களாலும், இத்தாலி நாட்டு வெள்ளை மார்பிள் கொண்டுள் கட்டப்பட்டுள்ளது. அதோடு இந்தியாவில் இருந்து பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு, அபுதாபி கொண்டு செல்லப்பட்டு இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
* இந்த பிரம்மாண்ட இந்துக்கோவில் கட்டுவதற்காக அபுதாபி மன்னர் ஷேக் முகம்மது பின் சையத் அலி நஹ்யன், 13.5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளார். 2015ம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி அபுதாபி வந்திருந்த போதே, இந்த கோவில் கட்டுவதற்கான நிலத்தை அபுதாபி மன்னர் அளித்து விட்டாராம்.
* அதோடு 2019ம் ஆண்டு ஜனவரி மாதம், அபுதாபி அரசால் மேலும் 13.5 ஏக்கர் நிலம் பாப்ஸ் இந்துக் கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 27 ஏக்கர் இந்த கோவில் கட்டுவதற்காக அபுதாபி சார்பில் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.