திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா
திருப்பதியில் திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு அடுத்த படியாக மிகவும் பிரபலமான, அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது கபிலேஸ்வர சுவாமி கோவிலாகும். இங்கு வருடாந்திர பிரம்மோற்சவ விழா மார்ச் 01ம் தேதி துவங்கி 10 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிப்ரவரி 29ம் தேதி அங்குரார்ப்பன வைபவம் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரம்மோற்சவ விழாவின் போது தினசரி எந்தெந்த வாகனங்களில் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சுவாமி உலா வருவார் என்பது குறித்த விபரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
கபிலேஸ்வர பிரம்மோற்சவ வாகன சேவை விபரம் :
மார்ச் 01 – காலை கொடியேற்றம், மாலை ஹம்ச வாகனம்
மார்ச் 02 – காலை சூரிய பிரபை, மாலை சந்திர பிரபை வாகனம்
மார்ச் 03 – காலை பூத வாகனம், மாலை சிம்ம வாகனம்
மார்ச் 04 – காலை மகர வாகனம், மாலை சேஷ வாகனம்
மார்ச் 05 – காலை திருசி விழா, மாலை அதிகார நந்தி வாகனம்
மார்ச் 06 – காலை வியாக்ர வாகனம், மாலை கஜ வாகனம்
மார்ச் 07 – காலை கற்பகவிருட்ச வாகனம், மாலை அஸ்வ வாகனம்
மார்ச் 08 – காலை ரத உற்சவம், மாலை நந்தி வாகனம்
மார்ச் 09 – காலை புருஷமிருக வாகனம், மாலை கல்யாண உற்சவம்
மார்ச் 10 – காலை திரிசூல ஸ்நானம், மாலை ராவணாசுர வாகனம்
கபிலேஸ்வர சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் இந்து தர்ம பிரசார பரிசத் சார்பில் கோலாட்டம், பஜனைகள் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தினமும் வாகன புறப்பாட்டிற்கு முன்பு கோலாட்டம், பஜனைகள் உள்ளிட்டவைகள் நடைபெறும். இந்த நாட்களை கணக்கிட்டு, பக்தர்கள் தங்களின் திருமலை திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தையும், கபிலேஸ்வர சுவாமி தரிசனத்தையும் திட்டமிட்டுக் கொள்ளும் படி திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.