ஈஷா மகா சிவராத்திரி விழா 2024 : முன்பதிவு செய்யும் முறை, கட்டணம் முழு விபரம் இதோ
ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி, பிரதமர், தொழில் துறை, விளையாட்டு துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வது வழக்கம். உற்சாகமும், பக்தியும் இணைந்து கொண்டாடப்படும் இந்த மகா சிவராத்திரி விழாவில் நூற்றுக்கணக்கானவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழா குறித்த அறிவிப்புகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
மகா சிவராத்திரி 2024 :
இந்துக்களின் மிக முக்கியமான விரத நாள், மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி விழாவாகும். சிவனுக்குரிய இரவாக இந்நாள் கருதப்படுகிறது. சிவனை உணரும் சிவராத்திரி விழா இந்த ஆண்டு மார்ச் 08ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளை மையத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். சிவனின் அருள் நிறைந்திருக்கும் மகா சிவராத்திரி நாளன்று ஈஷா மையத்தில் உள்ள ஆதிகுரு அல்லது ஆதியோகி சிலை முன் பிரம்மாண்ட தியானம், இசை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல், சத்குருவின் ஆன்மிக உரை ஆகியவற்றுடன் வெகு சிறப்பாக நடைபெறும்.
மகா சிவராத்திரி பற்றி சத்குருவின் மொழி :
ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முன்பு வரும் சதுர்த்தசி திதியை சிவராத்திரி என்கிறோம். வருடத்தில் 12 சிவராத்திரிகள் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்கிறோம். ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளில் இயற்கையாகவே பூமியின் வடக்கு திசையில் இருந்து மனிதனுக்கு அதிக அளவிலான ஆற்றல் கிடைக்கும். இயற்கை ஒருவரை ஆன்மிகத்தின் உச்சத்தை நோக்கி முன்னேற்றி தள்ளும் நாள் மகா சிவராத்திரி நாளாகும். இயற்கை நமக்கு தரும் ஆற்றலை நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டுமானால் முதுகுத் தண்டை நேராக வைத்து, விழிப்புடனும், மன ஒருமுகத்துடனும் இருக்க வேண்டும். இதன் காரணமாகவே மகா சிவராத்திரி நாளன்று இரவில் கண் விழிக்க வேண்டும் என்றும், சிவ பூஜை செய்து, தியானத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.