Jawan – ஒரே படம்தான்.. ஓஹோ வாழ்க்கை.. ஜவான் படத்துக்கு கிடைத்த பெருமையை பாருங்க
அட்லீ இயக்கிய திரைப்படம் ஜவான். ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த வருடம் வெளியானது. தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் படத்துக்கு ஒழுங்கான வரவேற்பு இல்லை. இருந்தாலும் வட மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. இந்தச் சூழலில் ஜவான் படத்துக்கு மேலும் ஒரு பெருமை கிடைத்திருப்பதை அடுத்து அட்லீக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துகிறார்.
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ தமிழில் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இணைந்துவிட்டார். அவர் படங்களை காப்பி அடிக்கிறார் என்று ரசிகர்கள் விமர்சனத்தை முன்வைத்தாலும் அவரது மேக்கிங்கும், சீன்களும் நன்றாகவே இருக்கும் என்பது பெரும்பாலானோரின் கருத்து. இந்தச் சூழலில் முதன்முதலாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். ஷாருக்கானே படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.
முழுக்க தமிழ் டீம்தான்: பொதுவாக கோலிவுட்டிலிருந்து பாலிவுட் செல்லும் இயக்குநர்கள் அங்கிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்தே பணியாற்றுவார்கள். ஆனால் அட்லீயோ முழுக்க முழுக்க தொழில்நுட்ப கலைஞர்களை இங்கிருந்து அழைத்து சென்றார். அழைத்து சென்றது மட்டுமின்றி அவர்களிடமிருந்து சிறந்த வேலையை வாங்கியிருக்கிறார் என்றும் பலர் கூறினர். அனிருத்கூட இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி ஆகி அடுத்தடுத்து சில ஹிந்தி படங்களில் கமிட்டாகியிருப்பதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நயனும் இன்னொரு ஹிந்தி படத்தில்ந் அடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
வசூல் மழை: ஷாருக்கானின் நடிப்பில் ஜவானுக்கு முன்னதாக வெளியான பதான் படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்தது. எனவே இந்தப் படமும் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க வேண்டும் என ஷாருக்கின் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக உலகம் முழுவதும் 1125 கோடி ரூபாயை ஜவான் படம் வசூலித்திருக்கிறத். இது வேறு எந்த இந்திய படமும் செய்யாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. ஜவான் படத்தின் வெற்றி காரணமாக உற்சாகமடைந்த ஷாருக் மிண்டும் அட்லியூடன் இணைந்து படம் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்களாம்.
கலவையான விமர்சனம்: வசூல் ரீதியாக ஜவான் படம் சிக்சர் அடித்தாலும் விமர்சன ரீதியாக அவுட் ஆனது. அதிலும் தமிழ் ரசிகர்கள் ஜவான் படத்தை கழுவி கழுவி ஊற்றினார்கள். எப்போதும் வேறு படங்களிலிருந்து அட்லீ காப்பி அடிப்பார் ஆனால் இதில் தன்னுடைய முந்தைய படங்களிலிருந்தே காப்பி அடித்திருக்கிறார். முக்கியமாக 10க்கும் மேற்பட்ட படங்களின் மூவி மிக்சர்தான் ஜவான் என ஓபனாக கூறினார். இருந்தாலும் வட மாநிலங்களில் ஜவான் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸே கிடைத்தது.
அடுத்த அங்கீகாரம்: இந்நிலையில் ஜவான் படத்துக்கு புதிய பெருமை ஒன்று கிடைத்திருக்கிறது. அதன்படி ஹாலிவுட் க்ரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் ஆஸ்ட்ரா விருது வழங்கும் விழாவில் ஜவான் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு நாடுகளிலிருந்து இந்த விழாவுக்கு அனாடமி ஆஃப் ஏ ஃபால் (பிரான்ஸ்), கான் க்ரீட் உட்டோபியா (தென் கொரியா), ஃபாலன் லீவ்ஸ் (பின்லாந்து), ஃபெர்ஃபெக்ட் டேஸ் (ஜப்பான், சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ (ஸ்பானிஷ்), தி டேஸ்ட் ஆஃப் திங்ஸ் (பிரான்ஸ்)உள்ளிட்ட 500 படங்கள் இந்த விழாவுக்கு பரிந்துரைக்ப்பட்டன.
ஒரே இந்திய படம்: இப்படி உலகம் முழுவதுமிலிருந்து சிறந்த படப்பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படங்களில் ஒரே இந்திய படம் ஜவான் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அட்லீக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகிறார்கள். அட்லீ அடுத்ததாக தெலுங்கில் ஒரு படம் செய்யப்போவதாகவும்; அதை முடித்துவிட்டு ஷாருக்கானை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கை அவர் பாலிவுட்டில் தயாரித்துவருவதும் கவனிக்கத்தக்கது.