விஜய் சார் வாழ்த்தினார்.. சினிமாவுக்கு வந்ததற்கான பலனை அடைந்தேன்.. சதீஷ் நெகிழ்ச்சி!
நடிகர் சதீஷ் நடித்துள்ள வித்தைக்காரன் திரைப்படக் குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், நடிகர்கள் சதீஷ், மதுசூதனன், நடிகை சிம்ரன் குப்தா, இயக்குநர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சதீஷ், நடிகர் விஜய் என்னுடைய படத்தை பார்த்து, அதைப்பற்றி தன்னிடம் பேச நினைத்தது, தான் சினிமாவுக்கு வந்ததற்கான பலன்களுள் ஒன்று என்று நடிகர் சதீஷ் பேசி உள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் வெங்கி. இவர் மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்களின் இணை இயக்குநராக பணியாற்றினார். தற்போது சதீஷ் நடித்துள்ள வித்தைக்காரன் திரைப்படத்தை இவர் இயக்கியுள்ளார். ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ் சார்பில் விஜய் பாண்டி இப்படத்தை தயாரித்துள்ளார்.
சதீஷ் நடிக்கும் வித்தைக்காரன்: வித்தைக்காரன் திரைப்படத்தில் சிம்ரன் குப்தா, தாரிணி, ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்ரமணியம் சிவா உட்பட பலர் நடித்துள்ளனர். வி.பி.ஆர் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு யுவா கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதுவரை நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சதீஷ், வித்தைக்காரன் திரைப்படத்தின் மூலம் சீரியஸ் கதாபாத்திரத்தை கையில் எடுத்துள்ளார்.
சதீஷ் பேச்சு: இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சதீஷ், நாய் சேகர், கான்ஜுரிங் கண்ணப்பன் படத்துக்கு நல்ல ரிவ்யூ கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. தளபதி விஜய் சாருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். விஜய் சார் கையால் தான் இந்த படத்துக்கு செக் வாங்கினேன். அவர் தான் இந்த படத்தை துவக்கி வைத்தார். அவருடைய கட்சி பெயர் அறிமுகம் செய்வதற்கு முன் தினம், நான் அவரை பார்க்கும் போது, கான்ஜுரிங் கண்ணப்பன் சூப்பர் ஹிட் என்று சொன்னார். அதை, அவர் சொல்லி கேட்கும் போது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அந்த படத்தை பார்த்து, அதைப்பற்றி என்னிடம் பேச நினைத்து இருக்கிறார் என்பது நான் சினிமாவுக்கு வந்ததற்கான பலன்களுள் ஒன்றாக நினைக்கிறேன் என்றார்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்: அவர் ரசிகர்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுப்பார் என்று நிறைய முறை சொல்லியிருக்கிறேன். கத்தி பட ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றபோது, இயக்குநர் வெங்கி அவரது தீவிர ரசிகன் என்று விஜய் சாரிடம் சொல்லியிருக்கிறேன். அவருக்கு பிறந்தநாள் என்றதும் வீடியோ மூலம் விஜய் சார் வாழ்த்து தெரிவித்தார். விஜய் சார் கட்சி தொடங்கி இருக்கிறார். அதிலும் மிகப்பெரிய வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உதயநிதியின் நல்ல பண்பு: தொடர்ந்து பேசிய சதீஷ், உதயநிதி ஸ்டாலின் ரொம்ப நாளாக ஒரே போன் நம்பர் தான் வைத்திருக்கிறார். நடிகராக இருக்கும் போலிருந்து எப்போது ஃபோன் பண்ணாலும் எடுத்து பேசுவார். அதே போலத்தான் இப்போ அமைச்சராக இருக்கும்போதும் ஃபோன் பண்ணா, எடுத்து பேசி பிரச்னையை தீர்க்கிறார். நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த நபர் உதயநிதி ஸ்டாலின் தான், இவரின் இந்த தன்மை நிச்சயமாக அவரை மிகப்பெரிய இடத்துக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன் என்றார்.
நடிகர் சதீஷ் நடித்த கான்ஜூரிங் கண்ணப்பன் கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியிருந்தார். ஏஜிஎஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பேய் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.