எங்களை கொச்சைப்படுத்திட்டாரு!.. மன்சூர் அலி கான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.. புது பிரச்சனை!
மன்சூர் அலி கான் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள சரக்கு படத்தின் பிரத்யேக ஷோ நேற்று திரையிடப்பட்டது. அப்போது அந்த விழாவில் திடீரென மைக்கை பிடித்து பேசிய நபர் எங்களை மன்சூர் அலி கான் கொச்சைப்படுத்தி இந்த படத்தில் காட்டியிருக்கிறார். அதற்கு பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சரக்கு படத்தின் புரமோஷன் ஆரம்பித்ததில் இருந்தே வெறும் சர்ச்சைகளாகவே கிளம்பி வருகின்றன. நடிகை திரிஷா பற்றி மோசமாக பேசியதில் மன்சூர் அலி கான் மீது வழக்கு வரை தொடுக்கப்பட்டது. பின்னர், திரிஷாவிடம் மன்னிப்புக் கேட்பது போல ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார் மன்சூர் அலி கான். அதன் பின்னர் திரிஷாவும் மன்னித்து விடுகிறேன் என்று சொன்னார்.
உடனடியாக நான் மன்னித்து விடு என சொல்ல வில்லை, மரணித்து விடு என்று சொன்னதை பிஆர்ஓ தப்பா சொல்லிட்டான் எனக்கூறி திரிஷா மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டார்.
சினிமாவில் இருந்தே காணாமல் போயிருந்த மன்சூர் அலி கானை சீவி சிங்காரிச்சு லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் நடிக்க வைத்த நிலையில், கடைசியில் அவரையே சங்கடப்படுத்தி விட்டார் மன்சூர் அலி கான்.
இந்நிலையில், சரக்கு படத்தின் பிரத்யேக காட்சியின் போது திடீரென வழக்கறிஞர் ஒருவர் இந்த படத்தில் வழக்கறிஞர்கள் எல்லாம் புரோக்கர்கள் என்று எப்படி சொல்லலாம். அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கொந்தளித்தார். உடனே கடுப்பான மன்சூர் அலி கான், யாருடா நீ உன்னை யாரு உள்ளே விட்டா என அவரிடமும் சண்டைக்கு சென்றது பெரும் சர்ச்சையாகி விட்டது.