சோலி முடிஞ்ச்.. இஷான் கிஷன் அடிமடியில் கை வைத்த ஜெய் ஷா.. பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கம்?
பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து இஷான் கிஷனை விடுவிக்க இந்திய அணி நிர்வாகம் ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய இளம் வீரர் இஷான் கிஷன் விவகாரம் நாளுக்கு நாள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது மனசோர்வு என்று கூறி, டெஸ்ட் தொடருக்கு முன்பாகவே நாடு திரும்பினார் இஷான் கிஷன். இதன்பின் ஆஃப்கானிஸ்தான் டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் அணியிலும் இஷான் கிஷன் தேர்வு செய்யப்படவில்லை.
ரஞ்சி டிராபி போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இஷான் கிஷன் பயிற்சியையே தொடங்காமல் இருந்தார். இதனால் இஷான் கிஷன் மீது பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், இஷான் கிஷன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
அவருக்கு சிறிய ஓய்வு தேவைப்பட்டது. அவருடன் தொடர்பிலேயே இருக்கிறோம். அவர் எப்போது பயிற்சியை தொடங்குகிறாரோ, நிச்சயம் இந்திய அணியில் சேர்க்கப்படுவார். ஆனால் அவர் இதுவரை பயிற்சியை தொடங்கவில்லையே என்று கூறினார். இதன்பின் இஷான் கிஷன், குஜராத்தில் பாண்டியா சகோதரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளி வந்தது.
இதனால் ரஞ்சி டிராபி போட்டிகளில் விரைவில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், மீண்டும் ரஞ்சி போட்டியில் விளையாடுவதை தவிர்த்தார் இஷான் கிஷன். இதற்கு தென்னாப்பிரிக்கா டி20 தொடரின் போது ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுத்ததை இஷான் கிஷன் ரசிக்கவில்லை. அதன் காரணமாக இஷான் கிஷன் கோபமடைந்து நாடு திரும்பியதாக தகவல் வெளி வந்தது.
ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டும் என்று மறைமுகமாக ராகுல் டிராவிட்டால் அறிவுறுத்தப்பட்டும், இஷான் கிஷன் மீண்டும் விளையாடாமலேயே பிடிவாதமாக இருந்தார். இதனால் தேர்வு குழு மற்றும் இந்திய அணி நிர்வாகம் இஷான் கிஷன் மீது கோபத்தில் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிசிசிஐ-யின் கிரேடு பி ஒப்பந்தத்தில் இஷான் கிஷன் இருக்கிறார்.
அவரை ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க பரிசீலனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டால், இஷான் கிஷன் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். அதன்பின் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடுவதே இஷான் கிஷனுக்கு கூடுதல் சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.