IPL 2024 : சிக்கலில் ஆர்சிபி.. ஐபிஎல் தொடரிலும் விளையாட மாட்டாரா விராட் கோலி? சோகத்தில் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டிகளிலும் ஆர்சிபி அணிக்காக விராட் கோலி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்த காரணங்கள் காரணமாக விராட் கோலி விலகியுள்ளதாகவும், அவரது முடிவுக்கு பிசிசிஐ தரப்பில் முழுமையான ஆதரவும் அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரசிகர்களும் விராட் கோலியின் முடிவை புரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐதராபாத் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் விராட் கோலி ஈடுபட்ட நிலையில், கடைசி நேரத்தில் விலகுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டி வில்லியர்ஸ், விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதி 2வது குழந்தையை எதிர்பார்த்துள்ளனர். அதன் காரணமாகவே டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருப்பதாக கூறினார். ஆனால் சில நாட்களுக்கு பின், விராட் கோலி பற்றி நான் கூறிய தகவல் தவறானது. விராட் கோலி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோருகிறேன் என்று வீடியோ வெளியிட்டார்.
இதனால் விராட் கோலி வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது புரியாமல் ரசிகர்கள் குழம்பினர். இதனிடையே இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மார்ச் 11ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடருக்கு தயாராக அந்தந்த அணிகளின் பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளனர்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் இடையில் வெறும் 10 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. இதனால் 10 நாட்களுக்குள் விராட் கோலி ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்புள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே ஐபிஎல் தொடரின் முதற்கட்ட போட்டிகளில் விராட் கோலி பங்கேற்பதில் சிக்கல் உருவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். அதேபோல் விராட் கோலிக்கான மாற்று வீரரை ஆர்சிபி அணி தயார் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.