இந்தியாவின் முதல் சுங்கசாவடி இல்லா நெடுஞ்சாலை இது தான்! பெங்களூரு மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்!
மத்திய அரசு தனது முதல் சுங்கச்சாவடி இல்லா தேசிய நெடுஞ்சாலையாக பெங்களூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை மாற்றப் போவதாக தற்போது தெரிவித்துள்ளது. இதன்படி பெங்களூருவில் இருந்து மைசூர் வரை செல்லும் வாகன ஓட்டிகள் இனி சுங்கச்சாவடியில் நின்று ஃபாஸ்ட்டேக் முறையில் பணம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பாஸ்ட் டேக் முறையில் தான் தற்போது சுங்கச்சாவடி கட்டணங்கள் எல்லாம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஃபாஸ்ட் டேக் கார்டுகள் என்பது முதன்முறையாக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. சுங்கச்சாவடிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்கான முயற்சியாக தான் இருந்தது. ஒவ்வொரு முறையும் பணம் செலுத்தினால் அதிக நேரம் எடுக்கிறது என்பதால் இந்த ஃபாஸ்ட் டேக் கார்டை கொண்டு வந்தார்கள்.
ஃபாஸ்ட் டேக் கார்டு பயன்பாட்டிற்கு வந்த பிறகும் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்று கொண்டுதான் இருக்கின்றன. ஃபாஸ்ட் டேக் காடுகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பல்வேறு குழப்பங்கள் காரணமாக இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொண்டு வர தற்போது மத்திய அரசு புதிய வகையிலான சுங்க கட்டண வசூல் முறையை அமலுக்கு கொண்டு வர உள்ளது.
அதன்படி சாலைகளில் ஆங்காங்கே நம்பர் பிளேட் ரீடிங் கேமராவை வைத்து சாலைகளில் ஓடும் அனைத்து வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளையும் கண்காணித்து அந்த குறிப்பிட்ட கார் சாலையில் எவ்வளவு தூரம் பயணம் செய்துள்ளது என்பதை கண்டறிந்து அந்த நம்பர் பிளேட் உடன் நேரடியாக இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து சுங்க கட்டணத்தை கழித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த வாரம் இந்த நடைமுறை வரும் தேர்தலுக்கு முன்பாகவே அமலுக்கு கொண்டுவரப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் பாராளுமன்றத்தில் ராஜ்யசபா உறுப்பினர் லெதர் சிங் சூர்யா எழுதிய கேள்விக்கு போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதில் மூலம் நமக்கு புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதன்படி பெங்களூரு மைசூர் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய தேசிய நெடுஞ்சாலை தான் இந்தியாவின் முதல் சுங்கச்சாவடி இல்லா தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்கள் நின்று செல்ல அந்த சாலையில் ஆங்காங்கே நம்பர் பிளேட் ரீடிங் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இது சாலையில் வாகனங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகிறது.
இதன் மூலம் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எவ்வளவு தூரம் பயணித்து உள்ளார்களோ அதற்கு தகுந்தார் போல் சுங்க கட்டணம் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் இருந்து கழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு சோதனை முயற்சியாகவே மத்திய அரசு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்தும் திட்டமிட்டபடி சிறப்பாக நடந்தால் தொடர்ந்து இது மற்ற சாலைகளுக்கும் விரிவு படுத்தப்பட்டு விரைவில் இந்தியாவில் உள்ள அனைத்து சொந்த சாவடிகளும் அகற்றப்பட்டு சுங்கச்சாவடிகள் இல்லாமல் அனைத்து வாகனங்களும் இப்படியாக நம்பர் பிளேட் மற்றும் ஜிபிஎஸ் முறையில் சுங்க கட்டணம் செலுத்துவதற்கான அனைத்து வழிகளும் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நடைமுறைக்கு வந்தால் இந்தியா மற்ற பல வல்லரசு நாடுகள் செய்யாத சாதனையை செய்யும் விதமாக இது அமையும் பல நாடுகளில் இந்த தொழில்நுட்பம் என்பது இன்னும் பெரும் கனவாகவே இருக்கிறது. இன்னும் பல நாடுகளில் சுங்கச்சாவடிகள் மூலமே கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்தியா இந்த முயற்சியை எடுக்கும் பட்சத்தில் வளர்ந்த நாடுகள் திரும்பிப் பார்க்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் அமையும்.