நம்ம தாத்தாவைவிட அதிக வயசான காரை மின்சார காராக மாற்றிய பிரபல நடிகர்! என்னங்க அந்த எஞ்சினை தூக்கிட்டாங்களா!!
பிரபல நடிகர் ஒருவர் அவரிடம் இருந்த ரொம்ப ரொம்ப பழைய ஐசிஇ எஞ்சின் (ICE Engine) கொண்ட அரிய வகை காரை மின்சார கார் (Electric Car)-ஆக மாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் யார்? எந்த காரை மின்சார காராக மாற்றி இருக்கின்றார்? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் மோமோவா, இவரே தன்னிடம் இருந்த மிக மிக அரிய வகை சொகுசு கார் ஒன்றை மின்சாரத்தில் இயங்கும் வாகனமாக மாற்றியவர் ஆவார். கேம் ஆஃப் த்ரான்ஸ் மற்றும் ஆக்குவாமேன் போன்ற முன்னணி ஆங்கில திரைப்படங்களில் நடித்தவரே ஜேசன் மோமோவா ஆவார்.
இவர் ஓர் மிகப் பெரிய கார் காதலர் ஆவார். அந்தவகையில், அவரிடத்தில் சுமார் 95 ஆண்டுகள் வயதுடைய 1929 ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் II (1929 Rolls-Royce Phantom II) இருக்கின்றது. இந்த காரையே நடிகர் தற்போது மின்சாரத்தில் இயங்கும் காராக மாற்றி இருக்கின்றார்.
இதனை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கார் மாடிஃபிகேஷன் நிறுவனமான கிட்லிங்டன் வாயிலாகவே அவர் மாற்றி இருக்கின்றார். இதற்கு முன்னதாக இந்த காரில் பெட்ரோல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருந்தது. இந்த எஞ்சின் தற்போது முழுமையாக அகற்றப்பட்டு இருக்கின்றது. மேலும், புதிதாக பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் ஆகியவை சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
இதற்காக காரின் சேஸிஸில் எந்த மாற்றம் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. மேலும், எலெக்ட்ரிக் காராக மாற்றப்பட்டு இருப்பதால் இந்த வாகனம் தற்போது மிகவும் அமைதியான வாகனமாக மாறி இருக்கின்றது. அத்துடன், சுற்றுச் சூழலுக்கு உகந்த பசுமை வாகனமாகவும் அது மாறி இருக்கின்றது.
இந்த காரை மின்சார வாகனமாக மாற்றுவதற்கு சுமார் 18 மாதங்கள் எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. இந்த காரை வெறும் மின்சார வாகனமாக மட்டுமே அவர்கள் மாற்றவில்லை. அதனை நவீன வசதிகள் தாங்கிய வாகனமாகவும் மாற்றி இருக்கின்றனர். ஆகையால், நவீன அம்சங்கள் தாங்கிய விண்டேஜ் லுக் அரக்கனாக ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் II காட்சியளிக்கின்றது.
ப்ளூடூத் இணைப்பு, கார் இணைப்பு மற்றும் பல சிறப்பம்சங்களைத் தாங்கிய காராகவே இந்த வாகனம் மாறி இருக்கின்றது. இந்த கார் விரைவில் வரவிருக்கும் டிவி சீரிஸ்களில் இடம் பெறும் என தெரிகின்றது. ஆகையால், இந்த கார் இன்னும் பலரை கவரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
1929 ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் II காரில் 7.7 லிட்டர் புஷ்ராட் ஸ்ட்ரைட்-6 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருந்தது. 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இத்துடன் வழங்கப்பட்டு இருந்தது. இது அதிகபட்சமாக 40-50 குதிரை திறனை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், இதன் மணிக்கு 80 மைல் வேகத்தில் இயங்க முடியும்.
அதாவது இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 128கிமீ ஆகும். இத்தகைய எஞ்சினையே ஜேசன் தற்போது அகற்றி இருக்கின்றார். அதற்கு பதிலாக 93 kWh பேட்டரி பேக்கையும், 150 kW மின்சார மோட்டாரையும் அவர் பொருத்தி இருக்கின்றார். இதை தவிர வேறு எந்த மாடிஃபிகேஷன் அவர் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.