PM Surya Ghar Muft Bijli Yojana வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

மின்சார பயன்பாட்டில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்ய வீடுகளின் மேற்கூரையில் சோலார் மின் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என ராமர் கோயில் திறப்பின் போது பிரதமர் மோடி அறிவித்தார்.

இதையடுத்து, 2024-2025-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மானிய விலையில் சோலார் மின் உற்பத்தி தொகுப்பை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு ஒரு கோடி வீடுகளில் செயல்படுத்தப்படும் எனவும், இதன் மூலம் ஒரு வீட்டுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் எனவும் அறிவித்தார்.

அதன்படி, பிரதம மந்திரி சூர்யோதயா யோஜனா திட்டத்தின் மூலம், நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீட்டுக் கூரைகளில் 1 கோடிக்கும் அதிகமான மேற்கூரை சோலார் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் பிரதமர் சூர்யா கர் எனும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின் கட்டணத்தைக் குறைக்கும் பிரதமரின் நோக்கத்தின் அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தி மற்றும் நிலையான முன்னேற்றத்தை அதிகரிக்கும் முயற்சியில், ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம் ஒரு கோடி வீடுகளுக்கு ஒளியூட்டுவதை நோக்கமாகக் கொண்ட பிரதமர் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனாவை தனது அரசாங்கம் தொடங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நீடித்த வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காக, நாங்கள் பிரதமர் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனாவைத் தொடங்குகிறோம் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த திட்டத்திற்காக 75,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும் மானியங்கள் முதல் சலுகைக் கடன்கள் வரை மக்கள் மீது செலவுச் சுமை இல்லாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் எனவும், இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் தேசிய ஆன்லைன் போர்ட்டலுடன் ஒருங்கிணைக்கப்படுவார்கள்; இது மேலும் வசதியாக இருக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தங்கள் அதிகார வரம்புகளுக்கு உட்பட்டு மேற்கூரை சோலார் திட்டத்தை பிரபலப்படுத்தும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகள் கவுரவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதே சமயம், இந்த திட்டம் அதிக வருமானம், குறைந்த மின் கட்டணம் மற்றும் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சூரிய சக்தி மற்றும் நிலையான முன்னேற்றத்தை அதிகரிப்போம் என சூளுரைத்துள்ள பிரதமர் மோடி, அனைவரும் குறிப்பாக இளைஞர்கள், ‘பிரதமர் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி’ திட்டத்தை வலுப்படுத்துமாறு கேட்டு கொண்டுள்ளார். மேலும், இந்த திட்டத்தின் கீழ் இணைந்து பயன்பெற https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறும் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *