IPL 2024 – சன்ரைசர்ஸ் அணியில் மீண்டும் குழப்பம்.. காவ்யா மாறன் தலையீடால் கடுப்பான வீரர்கள்
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஐதராபாத் அணியின் கேப்டன்சியில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற எஸ்ஏ20 இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி அபார வெற்றியை பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முதல் 2 சீசன்கள் முடிவடைந்த நிலையில், இரு சீசன்களிலும் எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியே கோப்பையை வென்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உற்சாகத்தில் உள்ளார்.
இதேபோல் ஐபிஎல் தொடரிலும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் ஐதராபாத் அணியை தயார் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஐபிஎல் ஏலத்தில் பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், ஹசரங்கா, உனாத்கட், ஜதாவேத் சுப்ரமணியம், ஆகாஷ் சிங் உள்ளிட்டோரை ஐதராபாத் அணி வாங்கியது. அதிலும் பேட் கம்மின்ஸை ரூ.20.50 கோடி கொடுத்து ஐதராபாத் அணி வாங்கியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதனால் ஐதராபாத் அணியில் கேப்டன்சி மாற்றம் ஏதேனும் நடக்குமா என்று சந்தேகம் எழுந்தது. ஏனென்றால் பயிற்சியாளராக டேனியல் விட்டோரி நியமனம் செய்யப்பட்டுள்ளதால், பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமனம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன. கடந்த சீசனில் எய்டன் மார்க்ரம் தலைமையில் ஐதராபாத் அணி களமிறங்கி மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.
இதனால் இந்திய மண்ணில் உலகக்கோப்பையை வென்ற கேப்டனான பேட் கம்மின்ஸை ஐதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்க காவ்யா மாறன் மற்றும் பயிற்சியாளர் டேனியல் விட்டோரி ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்திய ஆடுகளங்கள் மற்றும் இந்திய வீரர்கள் குறித்து போதுமான புரிதல் இல்லாததன் காரணமே மார்க்ரம் கேப்டன்சியில் இருந்து நீக்குவதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.