பெங்களூருவில் வன்முறையாக மாறிய கன்னட பெயர் பலகை போராட்டம்; பலர் கைது
பெங்களூரு நகரின் அனைத்துப் பலகைகளிலும் 60 சதவிகிதம் கன்னடத்தை அமல்படுத்தக் கோரி நடைபெற்ற போராட்டம் புதன்கிழமை நகரின் பல பகுதிகளில் வன்முறையாக மாறியது. சடஹள்ளி டோல்கேட்டில் இருந்து பெங்களூரு நகரை நோக்கி கர்நாடக ரக்ஷனா வேதிகே (KRV) நடத்திய ஊர்வலத்தின் போது பல பலகைகள் சிதைக்கப்பட்டன.
பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஒரே நேரத்தில் போராட்டங்கள் நடந்தன, போராட்டக்காரர்கள் கன்னடம் இல்லாத பலகைகளை அகற்றினர். KRV தலைவர் டி.ஏ நாராயண கவுடா உட்பட பல போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு நகரம் முழுவதும் உள்ள அனைத்து நிறுவனங்களும் பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னடத்தை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்ற பெங்களூரு மாநகராட்சியின் உத்தரவை அடுத்து, அனைத்து நிறுவனங்களுக்கும் கன்னட சார்பு அமைப்பு டிசம்பர் 27-ஆம் தேதி வரை கெடு விதித்தது. இந்த உத்தரவு பெங்களூரு மாநகராட்சியின் வெளிப்புற அடையாளங்கள் மற்றும் பொதுச் செய்தியிடல் துணைச் சட்டங்கள், 2018ஐ அடிப்படையாகக் கொண்டது.
VIDEO | Members of Karnataka Rakshana Vedike tear down posters in English on Bengaluru streets, warning commercial establishments to install billboards in Kannada. pic.twitter.com/LVQUUVj2DV
— Press Trust of India (@PTI_News) December 27, 2023
கன்னட குழுக்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து, பெங்களூரு மாநகராட்சி அனைத்து நிறுவனங்களும் விதிமுறைகளை கடைபிடிக்க பிப்ரவரி 28 ஆம் தேதியை காலக்கெடுவாக நிர்ணயித்தது.
கன்னட ஆதரவு அமைப்புகள் நடத்திய போராட்டங்களை போலீசார் முறியடித்து வருவதாக நாராயண கவுடா கூறினார். “நேற்று இரவு முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் பேசினேன். போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் என உறுதி அளித்தனர். அவர்கள் எங்களை கைது செய்தாலோ அல்லது இயக்கத்தை நிறுத்தினால், பெங்களூரில் ஏதேனும் எதிர்பாராத சம்பவங்கள் நடந்தாலோ அதற்கு காவல்துறைதான் பொறுப்பேற்க நேரிடும்,” என்று நாராயண கவுடா கூறினார்.
போராட்டக்காரர்கள் மல்டி சிட்டி ஹோட்டல் சங்கிலியான ப்ளூமின் அடையாள பலகையை சேதப்படுத்தினர், அதில் கன்னடம் இல்லை. கன்னட ஆதரவு கோஷங்களை எழுப்பியபடி அவர்கள் ஹோட்டல் வளாகத்திற்குள் நுழைந்ததையும் காணமுடிந்தது. சிக்கஜாலாவை நோக்கி பேரணியாக சென்ற கன்னட ஆதரவு அமைப்பினர் பல பெயர் பலகைகளை சிதைத்து அகற்றினர். போராட்டக்காரர்கள் சில பலகைகளில் பெயின்ட் அடிக்கும் வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டன. விமான நிலைய சாலையில் நிறுவப்பட்டிருந்த பெரிய ஃப்ளெக்ஸ்களையும் அவர்கள் கிழித்தெறிந்தனர்.
கன்னட ஆதரவு அமைப்புகளின் நீண்டகால கோரிக்கையான கன்னட அடையாளங்களை நிறுவுதல்,, கடந்த வாரம் கன்னட அமைப்பினர் பெங்களூரு நகரின் சிக்பேட்டில் ஊர்வலம் நடத்தியதால் தீவிரமடைந்தது.