Exclusive – ரஜினிதான் எனது வழிகாட்டி.. பாபர் மசூதி இடிப்பால் சிறைக்கு சென்றேன்.. மூணார் ரமேஷ் பிரத்யேக பேட்டி
சென்னை: மூணார் ரமேஷ் தமிழ் சினிமாவில் நல்ல குணச்சித்திர நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவர் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்து வெளியான லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
படம் சுமாரான வரவேற்பையே பெற்றிருக்கிறது. இவர் ஏற்கனவே ரஜினியுடன் சிவாஜி படத்திலும் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் ரஜினி பற்றியும் அவருடன் பணியாற்றியது பற்றியும் தமிழ் பில்மிபீட்டுக்கு சிறப்பு பேட்டி அளித்தார் மூணார் ரமேஷ்.
பாலுமகேந்திரா இயக்கிய அது ஒரு கனாக்காலம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மூணார் ரமேஷ். அந்தப் படத்துக்கு பிறகு தீண்ட தீண்ட, தலைநகரம், புதுப்பேட்டை, சிவாஜி, கிரீடம், பொல்லாதவன், பீமா, ஜெயம்கொண்டான், ஆடுகளம், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
தனக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை மிகச்சரியாக புரிந்துகொண்டு எதை கொடுக்க வேண்டுமோ அதை அருமையாக நடிப்பில் வெளிக்காட்டும் திறமை கொண்டவர்.
அடையாளம் தந்த புதுப்பேட்டை: மூணார் ரமேஷுக்கு புதுப்பேட்டை திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. தனுஷின் தந்தையாக அதில் நடித்திருந்த மூணார் ரமேஷ் அட்டகாசமான பெர்பார்மன்ஸை வெளிப்படுத்தியிருந்தார். முக்கியமாக தனுஷ் அன்பு கதாபாத்திரத்தை கொலை செய்துவிட்டு ரமேஷ் வீட்டுக்கு வந்து தங்கும்போது, ‘பணத்தை உள்ள வை குமாரு’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ போன்ற வசனங்களை அவர் பேசிய விதம் இன்றுவரை சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.