#BREAKING : பாஜகவில் இணைந்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான்..!
மகாராஷ்டிராவின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அசோக் சவான். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சங்கர் ராவ் சவானின் மகனான இவர், அம்மாநில அமைச்சராகவும், இரண்டு முறை முதல்வராகவும் பதவி வகித்தவர். காங்கிரஸில் செல்வாக்கு மிக்க தலைவரான அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று (திங்கள்கிழமை) விலகி உள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோலிக்கு எழுதியுள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் அசோக் சவான், மகாராஷ்டிர சபாநாயகர் ராகுல் நர்வேகரை சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பை நர்வேகர் உறுதி செய்துள்ளார். அசோக் சவான் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அசோக் சவான் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகிய அசோக் சவான் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். பிப். 27ம் தேதி மகாராஷ்டிராவில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸில் இருந்து சவான் விலகியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.