Vettaiyan: பண்டிகையில் பட்டையைக் கிளப்பவரும் ரஜினிகாந்த்! வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய் பீம் படத்தின் மூலம் பெரும் பாராட்டுகளை அள்ளிய இயக்குநர் த.செ.ஞானவேல், நடிகர் ரஜினிகாந்தின் 170ஆவது படமான வேட்டையன் திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். பான் இந்திய படமாக உருவாகி வரும் இப்படத்தில், அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங் என பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, கேரளா, திருநெல்வேலி என நடைபெற்று இறுதியாக ஆந்திர மாநிலம் கடப்பாவில் ஃபகத், ராணா தொடர்பான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, வேட்டையன் படத்தின் 85 விழுக்காடு ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ரஜினிகாந்தின் காட்சிகளைப் படம்பிடிக்க இன்னும் 3 வாரங்கள் மட்டுமே தேவைப்படுவதாகவும், இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஷூட்டிங் நிறைவு பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் 29ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி ரிலீஸாக வேட்டையன் திரைப்படம் திரைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.