கறிவேப்பிலை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Health Benefits Of Curry Leaves Water In Tamil: தினசரி சமையலில் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை.
என்ன தான் கறிவேப்பிலை உணவில் சேர்த்தாலும், அதை குப்பையாக நினைத்து நிறைய பேர் தூக்கி எறிந்து விடுகின்றனர். கறிவேப்பிலை சமையலில் வெறும் மணத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை, அதில் ஏராளமான இன்றியமையாத சத்துக்கள் நிறைந்துள்ளன.
எனவே முதலில் கறிவேப்பிலையை ஒரு குப்பை பொருளாக நினைப்பதைத் தவிர்த்திடுங்கள். மேலும் நிறைய பேர் கறிவேப்பிலை தலைமுடியின் வளர்ச்சிக்கு மட்டும் தான் உதவுவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கறிவேப்பிலை நாம் நினைத்து பார்க்காத அளவில் பல நன்மைகளை உடலுக்கு வழங்கக்கூடியது.
அதுவும் கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பதைத் தவிர, அந்த கறிவேப்பிலையின் நீரை காலையில் தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் பல அற்புதங்கள் நிகழும். இப்போது தினமும் காலையில் காபி, டீ-க்கு பதிலாக கறிவேப்பிலை நீரைக் குடித்து வந்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. செரிமானம் மேம்படும்
கறிவேப்பிலையில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளன. எனவே கறிவேப்பிலை நீரை காலையில் குடித்து வந்தால், அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கும். முக்கியமாக நீண்ட நாட்களாக மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்து வந்தால், அதிலிருந்து விடுபடலாம்.
2. இரத்தம் சுத்தமாகும்
கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகம் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் மற்றும் இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. அதற்கு அந்த கறிவேப்பிலை நீரை காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக குடிக்க வேண்டும். இதனால் ஒட்டுமொத்த உடலும் சுத்தமாவதோடு, கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.
3. முடி வளர்ச்சி அதிகரிக்கும்
கறிவேப்பிலையில் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும் பண்புகள் அதிகம் உள்ளன. எனவே தான் கறிவேப்பிலை சாப்பிடுவதால் தலைமுடி நன்கு கருகருவென்று வளர்கிறது மற்றும் முடி நன்கு வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது. நீங்கள் தலைமுடி அதிகம் உதிர்வதை உணர்ந்தால், கறிவேப்பிலை நீரை குடிக்கத் தொடங்குங்கள்.
4. சரும ஆரோக்கியம் மேம்படும்
கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், இதை உட்கொள்ளும் போது ப்ரீ ராடிக்கல்களால் சருமத்தில் ஏற்படும் சேதம் தடுக்கப்படுகிறது. நீங்கள் நல்ல பொலிவான சருமத்தைப் பெற விரும்பினால், காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை நீரை குடித்து வாருங்கள்.