ரஹானே, புஜாராவே விளையாடுறாங்க.. உங்களுக்கு அவ்வளவு திமிரா.. இளம் வீரரை வெளுக்கும் முன்னாள் வீரர்!

ரஞ்சி டிராபி போன்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காத வீரர்களை இந்திய அணிக்கு தேர்வு செய்யக் கூடாது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் விவகாரம் முன்னாள் வீரர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மனசோர்வு காரணமாக தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு முன்பாகவே நாடு திரும்பிய இஷான் கிஷன், முழு ஃபிட்னஸுடன் இருந்த போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடாமல் தவிர்த்து வந்தார். ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்ட இஷான் கிஷனின் செயல் கூடுதல் விமர்சனத்தை பெற்றுள்ளது.

இந்திய அணி தரப்பில் அறிவுறுத்தப்பட்டும் ரஞ்சி டிராபி போட்டிகளில் இஷான் கிஷன் விளையாடவில்லை. இதுகுறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், இளம் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் இடம் இருக்கிறது என்று நினைத்து கொண்டு ரஞ்சி டிராபி தொடர்களில் விளையாடுவதில்லை. சாதாரணமாகவே உள்ளூர் கிரிக்கெட் விளையாடுவதில் இளம் வீரர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை. ஆனால் அவர்கள் அனைவரும் ஒன்றை மனதில் வைத்து கொள்ள வேண்டும்.

புஜாரா, ரஹானே போன்ற ஜாம்பவான்கள் இந்திய அணிக்காக ஏராளமான போட்டிகளில் விளையாடிய போதும், ரஞ்சி டிராபியை ஆடுகிறார்கள். ஐபிஎல் தொடரில் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும், ரஞ்சி டிராபியில் விளையாட தவறுவதில்லை. யாராக இருந்தாலும் இந்திய அணிக்காக ஆடவில்லை என்றால், அவர் முழு உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக முதல்தர கிரிக்கெட்டை விளையாட வேண்டும். ஒருவேளை யாராவது விளையாடாமலேயே இந்திய அணிக்கு திரும்பலாம் என்று நினைத்தால், அவர்களுக்கு தேர்வு குழு எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.

ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடிவிட்டு, அனைத்து வடிவங்களுக்குமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாட முடியும் என்று நினைக்காதீர்கள். இந்த விவகாரத்தில் தேர்வு குழு தலைவரான அஜித் அகர்கர் நிச்சயம் சில வரையறைகளை வகுக்க வேண்டும். விராட் கோலி, பும்ரா போன்ற நட்சத்திர வீரர்களுக்கு சொந்த காரணங்கள் அல்லது வேலை பளு காரணமாக ஓய்வு அளிக்கலாம். அதேபோல் முதல்தர கிரிக்கெட் நடக்கவில்லை என்றால் எந்த வீரராக இருந்தாலும் ஓய்வெடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *