ஐசிசி விருது – வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப் சாதனை.. முதல் முறையாக அணிக்கே கிடைத்த பெருமை
Shamar joseph : சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு மாதமும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு ஐசிசி விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டில் ஜனவரியில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பது குறித்து மூன்று வீரர்களின் பெயர் பரிசீலனை செய்யப்பட்டது.
இந்த காலகட்டத்தில் தான் இந்தியா இங்கிலாந்து போட்டி மற்றும் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் போட்டிகள் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த விருதுக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அறிமுக நட்சத்திர வீரர் சமர் ஜோசப் மற்றும் ஆலி போப் , ஹேசல்வுட் ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
இதில் இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் ஆலி போப் 196 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதே போன்று வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடர் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.
ஆனால் இவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிடும் விதமாக ஷமர் ஜோசப் ஆஸ்திரேலியாவின் கோட்டையான பிரிஸ்பேன் மைதானத்தில் இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்களை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்ய உதவினார். இதன் மூலம் 1997 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இதனை பாராட்டி தற்போது ஐசிசி அவருக்கு ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர்களுக்கான விருதை வழங்கி இருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமர் ஜோசப், இந்த விருதை வாங்குவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உலக அளவில் இதுபோன்ற விருதை வாங்கும் போது ஸ்பெஷலாக உணர்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விளையாடிய போது ஒவ்வொரு தருணத்தையும் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுபவித்தேன். அதுவும் கடைசி பந்தில் நான் வீசிய பந்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஒரு விக்கெட் எடுத்து அணிக்கு வெற்றியை தேடி தர வேண்டும் என்பது என்னுடைய கனவு. அந்த கனவு எனக்கு நிறைவேறியது. இருப்பினும் தொடர்ந்து நான் கடுமையாக உழைப்பேன். இதுபோன்று பல போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற நான் உதவுவேன். அது பேட்டிங் ஆக இருந்தாலும், சரி பந்துவீச்சாக இருந்தாலும் சரி. எனக்கு ஆஸ்திரேலியாவில் உதவிய அனைத்து அணி நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சமர் ஜோசப் கூறியுள்ளார். தற்போது சமர் ஜோசப் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.