இந்தியர்களே.. இனி 7 நாடுகளில் யுபிஐ பயன்படுத்தலாம்..!
இந்தியாவில் நாம் எந்த மூலைக்கு சென்றாலும் கையில் ரொக்கமாக பணம் கொண்டு செல்ல வேண்டிய தேவையில்லை. ஒரு ஸ்மார்ட்போன், அதில் ஒரு யுபிஐ செயலி, வங்கி கணக்கில் பணம் இவை இருந்தால் போதும்.
அப்படி இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படும் யுபிஐ சேவையை இனி இலங்கை, பிரான்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளிலும் பயன்படுத்த முடியும்.
யுபிஐ சேவை: மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு யுபிஐ கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியது. அதாவது உங்கள் வங்கி கணக்கை யுபிஐ செயலியில் இணைத்துக் கொண்டால் போதும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அடிப்படையில் நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம், பணம் பெறலாம், வியாபாரிகளுக்கு கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தலாம்.
பயன்படுத்த மிக எளிமையாக இருப்பதால் இது எளிதாக மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டது. குறிப்பாக ஃபின் டெக் நிறுவனங்களின் வளர்ச்சியும் இதற்கு முக்கிய காரணம். இதன் விளைவாக
இந்தியாவில் தற்போது பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரை யுபிஐ பரிவர்த்தனை பிரதானமாக மாறியுள்ளது.
உலகிற்கே உதாரணம்: பணப் பரிவர்த்தனை தொழில்நுட்பத்தில் இந்தியாவின் யுபிஐ கட்டமைப்பானது உலக அளவில் முன்னுதாரணமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் 10 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்து சாதனை படைத்தது. 2022-23ஆம் ஆண்டில் டிஜிட்டல் பேமெண்ட் பரிவர்த்தனைகளில் 62% யுபிஐ மூலம் நடைபெற்றது என தரவுகள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளிலும் யுபிஐ: யுபிஐ செயலியை பயன்படுத்தி வெளிநாடுகளிலும் எளிதாக பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் இறங்கியுள்ளது.
இதன் எதிரொலியாக கடந்த வாரம், பிரான்ஸ் நாட்டின் சுற்றுலத்தலமான ஈஃபிள் டவரில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஈஃபிள் டவரை காணச் செல்லும் இந்தியப் பயணிகள், அதற்கான கட்டணத்தை தங்கள் மொபைலில் உள்ள யுபிஐ செயலி மூலம் ரூபாயிலேயே செலுத்த முடியும். இதன் தொடர்ச்சியாக தற்போது இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளிலும் யுபிஐ சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி 13 செவ்வாய்க்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில், UPI மற்றும் RuPay கார்டு சேவைகளை UAE-யை மக்களின் பயன்பாட்டுக்காக அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினர்.
7 நாடுகளில் பயன்படுத்தலாம்: இதுநாள் வரை உள்ளூரில் மட்டுமே பயன்படுத்தி வந்த யுபிஐ சேவையை இனி வெளிநாடுகளிலும் பயன்படுத்த முடியும் என அறிவித்துள்ளது மத்திய அரசு. பிரான்ஸ், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், மொரிஷியஸ், இலங்கை, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய 7 நாடுகளில் யுபிஐ சேவையானது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட் என்பதை வெளிகாட்டும் வகையில் இந்த முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை யுபிஐ செயலி பயன்பாட்டில் போன்பே முன்னிலையில் இருக்கிறது. அடுத்ததாக கூகுள் பே மற்றும் பீம் செயலிகள் உள்ளன. தொடக்கத்தில் பேடிஎம் செயலி தான் யுபிஐ பரிவர்த்தனைகளை மக்களிடம் சென்று சேர்த்ததில் முக்கிய பங்காற்றியது. ஆனால் அண்மையில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடையால் அதன் பயன்பாடு பெருமளவில் குறைந்து வருகிறது.