தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் ஐரோப்பிய நாடொன்றின் பெண் பிரதமர்: ரஷ்யா அதிரடி
எஸ்தோனியா பிரதமர் உட்பட மூன்று அமைச்சர்களை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இணைத்துள்ளது ரஷ்ய பொலிஸ்.
இது வெறும் தொடக்கம் மட்டுமே
குறித்த தகவலை ரஷ்ய உள்விவகார அமைச்சரகம் தனது இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. எஸ்தோனியாவின் பிரதமரான Kaja Kallas மற்றும் உள்விவகார செயலர் ஆகிய இருவரும், லிதுவேனியாவின் கலாச்சார அமைச்சர் உள்ளிட்ட மூவரையும் ரஷ்யா தேடப்படும் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov தெரிவிக்கையில், எஸ்தோனியா பிரதமர் Kaja Kallas வரலாற்று நினைவுச்சின்னத்தை இழிவுபடுத்த முயன்றார் என குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, சோவியத் ராணுவத்தினரின் நினைவுச்சின்னங்களையும் எஸ்டோனியா அரசாங்கம் அழித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், ரஷ்ய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் Maria Zakharova தெரிவிக்கையில், இது வெறும் தொடக்கம் மட்டுமே என்றார்.
மேலும், நாசிசம் மற்றும் பாசிசத்தில் இருந்து உலகை விடுவித்தவர்களின் நினைவுச்சின்னங்களை அழிக்கும் குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் எஸ்தோனியா பிரதமர் Kaja Kallas தரப்பில் இருந்து இதுவரை எவ்வித கருத்தும் வெளியாகவில்லை. மட்டுமின்றி, லிதுவேனியாவின் கலாச்சார அமைச்சரகமும் இந்த விவகாரத்தை உறுதி செய்யவில்லை.
ரஷ்ய தரப்பில் எச்சரிக்கை
முன்னர் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த பால்டிக் நாடுகள் சோவியத் கால நினைவுச்சின்னங்களை இடிக்கும் திட்டத்தை அறிவித்தன. மேலும், எஸ்தோனிய அதிகாரிகள் அத்தகைய 200 முதல் 400 நினைவுச்சின்னங்களை அகற்றுவார்கள் என்று கடந்த 2022ல் பிரதமர் கல்லாஸ் கூறியிருந்தார்.
இதனையடுத்து குற்றவியல் விசாரணை முன்னெடுக்கப்படும் என்று ரஷ்ய தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உண்மையில் ரஷ்ய எல்லையை கடக்க நேர்ந்தால் மட்டுமே எஸ்தோனியா அல்லது லிதுவேனியா அரசியல்வாதிகள் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.
இல்லையெனில் தேடப்படும் குற்றவாளிகள் என்று அறிவிப்பதால் உண்மையான விளைவுகளை ஏற்படுத்தாது என்றே கூறப்படுகிறது.