சினிமா இயக்குநர்கள் உருவாக்கி வைத்திருக்கும் காதல் வகைகள் பற்றி பார்ப்போமா..!
பச்சை பசேல்னு காதல்
இதனை படித்ததும் 80ஸ்களுக்கு சென்று வயல்வெளிகளில் ஹீரோயின் ஓட எங்கிருந்தோ இளையராஜா பாடலுக்கு வாயசைக்கும் ஹீரோவின் முகம் தெரிகிறதா…. அப்போ அந்த இயக்குநர் யாராக இருக்கும்? அவரே தான். பாரதிராஜா. கிராமம், தவாணி என்று அவர் படம் எடுத்தாலும் அப்போதைக்கு வித்தியாசமான காதல் கதைகளை சொல்லியது இவர் தான். பாரதிராஜா வகை காதலர்கள் இன்றும் நம்மூரில் இருக்க தான் செய்கிறார்கள். பிடித்த பெண்ணை பார்த்தால் வெள்ளாடை தேவதைகள் சுற்றுவதாக பேஸ்புக்கில் பதிவிடுகிறார்களே அவர்கள் தான் இந்த வகை. டிரெயின்களிலும், பேருந்துகளிலும், கோவில் சுவர்களையும் மெசேஜிங் பொருளாக கருதுபவர்கள் எல்லாம் கிழக்கே போகும் ரயில் பார்த்து வளர்ந்தவர்களே. இவர்கள் தான் காலப்போக்கில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்சில் காதலை சொல்லிக்கொண்டு இருப்பவர்கள்.
இவர்களிடம் சென்று
“இப்போ லவ் யூனு ஸ்டேட்ஸ் வெச்சியே யாருக்கு” என்று கேட்டால்,
“அவனுக்கு/ அவளுக்கு தான்” என்று கூறுவார்கள்.
“அப்போ நேர அந்த நபருக்கு மெசேஜ் பண்ணி இருக்கலாமே” என்றால், அதற்கு பதில் இருக்காது. அந்த நபர் திருமண அழைப்பதிழ் கொடுப்பதற்குள் சொல்லிவிட்டால் சரிதான்.
லோ வால்யூம் காதல்
துச்சாதனன், துகில் என்றெல்லாம் காதலர்கள் பேசிக்கொள்வார்களா? ஆம் மணிரத்னம் படங்களில் வரும் காதலர்கள் பேசிக்கொள்வார்கள். இந்த வகை காதலர்களின் ப்ளஸ் ஒன்று இருக்கிறது இவர்கள் பேசுவது பிறருக்கு கேட்கவே கேட்காது. சில சமயங்களில் அவர்களுக்கே கேட்காது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். எப்போதும் ஹஸ்கி வாய்சில் பேசுவது கனவுகள் எல்லாம் சில்லவுட் காட்சிகளாகவும், டிம் லைட் காட்சிகளாகவும் இருப்பது இவர்களது ஸ்பெஷாலிட்டி. இந்த வகை காதலர்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றம் அடைந்து லிவ் இன் வரைக்கும் வந்துவிட்டார்கள். அவர்களை ஆச்சர்யமாக பார்க்கும் போது லிவ் இன் எல்லாம் சரியா வராது திருமணம் தான் என்று கூறுவார்கள். அடேய்.. அதற்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே டா… எதற்கு லிவ் இன் புகழ் பாடிவிட்டு திருமணத்தில் முடித்தாய் என்று கேட்க தோன்றும். பச்… கேட்டு விடாதீர்கள்.
காதல்னாலே தியாகம் தானே
இந்த வகையில் தியாகம் தான் பிரதானம். அதிலும் ஆண்கள் எந்த தியாகமும் செய்வதில்லை. காதலிகள் தியாக செம்மல்களாக இருப்பார்கள். பிறகு அந்த தியாகத்திற்காக காதலர் உழைத்து அப்பெண்ணை சிறப்பாக பார்த்துக்கொள்வார். இதைப்படிக்கும் போது லலல.. லலல.. லா… பின்னணியில் இசைக்குமே? அப்போது யார் என்று சொல்லவா வேண்டும். இவரது படங்களுக்கு பெரிய அறிமுகம் எல்லாம் தேவையிருக்காது. இவர் பெயர் தான் அடையாளமே. ‘விக்ரமன் படம்’ என்பது வாழ்வியலாகவே மாறிவிட்டது அல்லவா?
இந்த வகைக்குள் தான் சூர்யவம்சம் நந்தினியும், வானத்தை போல கவுரியும் வருவார்கள்!
சென்னையை தாண்டி… இந்தியாவை தாண்டி… விண்ணைத்தாண்டி…
காதலுக்காக இவர்கள் விண்ணைத்தாண்டியெல்லாம் சென்றதில்லை பலமுறை இந்தியாவை தாண்டி சென்றிருக்கிறார்கள். அவ்வளவு வசதிப் படைச்சவங்களா? என்றால் இல்லை… மிடில் கிளாஸ் தான். அப்போ எப்படி காதலுக்காக அமெரிக்கா சென்றார்கள். காதல் எதையும் செய்யும் அல்லவா?
இப்படி ரியாலிடிக்கு வெகு தொலைவில் வாழ்ந்து கொண்டு இருப்பவரக்ள் கவுதம் வாசுதேவ் மேனன் படங்களின் வகை காதலர்கள். கவுதம் எப்படி மணிரத்னத்தின் அப்கிரேடட் வெர்ஷனாக இருக்கிறாரோ, அது போல தான் இந்த வகை காதலர்களும். ஏதோ ஓர் சந்திப்பில் பார்த்த பெண்ணை டீக்குடிக்க சம்மதிக்க வைக்க ஒருவரால் மாநகர பேருந்தை நிறுத்தி வைத்திருப்பாரே மிஸ்டர் மனோகர் அவரின் வாரிசு தான்… யார் என்றே தெரியாத பெண், ரயிலில் தூங்கிக்கொண்டு இருக்கும் போது கண் அசைக்காமல் பார்த்துக் கொண்டு இருப்பவர்கள். போதாக்குறைக்கு அந்த பெண்ணை பார்க்க அமெரிக்காவுக்கு செல்ல கூட யோசிக்க மாட்டார்கள். டேய் இதெல்லாம் வேற லெவல் Stalking டா… என்றால் கிட்டார் எடுத்து வாசிக்க தொடங்கி விடுவார்கள். இவர்களுக்கும் ஒரு ப்ளஸ் இருக்கிறது. இவர்களின் காதலுக்கு தந்தையே… ஏன்? ஒட்டுமொத்த குடும்பத்தாரே உதவுவார்கள். நைஸ்
ஹை வால்டேஜ் காதலர்கள்
தமிழ் சினிமாவின் ஹை வால்டேஜ் ஹரி படங்களின் வகை காதலர்களைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த வகையில் பெண் எவ்வளவு அமைதியானவராக இருந்தாலும் டூயட் பாடல் குத்து பாடலாக தான் இருக்கும். இவர்களின் காதலுக்கு பெரிதாக எந்த தடங்களும் வராது என்பது இவர்களது ப்ளஸ். இவர்களை எல்லாம் எப்படி கண்டுப்பிடிக்கலாம் தெரியுமா? இவர்கள் காதலியிடம் கூட ஷோல்டரை உயர்த்தி தான் பேசுவார்கள். டேய் சண்டைக்காட்சி முடிஞ்சி அரை மணி நேரம் ஆகிவிட்டது டா என்று நியாபகப்படுத்தினால் கூட அயர்ன் செய்த காட்டன் துணி போல தான் இருப்பார்கள். இந்த மூஞ்சில ரொமான்சே வராதா என்று நாம் யோசிக்கும் நேரத்தில் ஒரு பெண் அவரை துரத்தி துரத்தி காதலித்து கொண்டு இருப்பார்.
அட்லீ வகை லவ்வர்ஸ்கள்
இந்த டைப் காதலர்களுக்கு பெயர் நேரடியாக அட்லீ வகை என்ற கூறியதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதில் இருந்தே இவர்களை பற்றி பார்ப்போம். அழகான கடற்கரை… மயக்கும் ரஹ்மான் இசை, ரஹ்மான் பிசியாக இருந்தால் ஜி.வி.பிரகாஷ் இசையைக் கூட வைத்துக்கொள்ளலாம்… காதலர்கள் கைப்பிடித்து நடந்து செல்கிறார்கள்… இப்படி ஒரு காட்சியை எச்.டி தரத்தில் யோசித்துப்பாருங்கள். அந்த தருணத்தில் சுனாமி பேரலை வந்து செல்கிறது. அலையடித்து சென்ற பிறகு ஹீரோயின் இறந்து கிடப்பார். ஹீரோவும் தானே உடன் இருந்தார் என்றெல்லாம் நமக்கு யோசிக்க நேரம் இருக்காது. அதற்குள் அந்த அலை எப்படி ஹீரோயினின் உயிரை பறித்தது என்பதை ஸ்லோ மோஷனில் விவரித்துக்கொண்டு இருப்பார் அட்லீ. இப்படி இருக்க இந்த வகைக்கு எப்படி பெயர் வைப்பது?
பிறகென்ன காதலியை இழந்து வாடும் அந்த ஆணுக்கு அடுத்த காதல் மலரும். இந்த முறை எந்த பிரச்னையும் வராது.. இனி எல்லாம் சுகமே தான்.
இந்த வகைக்கு இயக்குநர் வசந்த் தான் முன்னோடி. அட்லீயின் படத்தில் வரும் காதல் காட்சிகளில் பட்ஜெட்டை குறைத்தால் கிட்டத்தட்ட வசந்த் படத்தை நெருங்கிவிடலாம்.
இப்படி ப்ளாக் மேக்அப் பாலா வகை, புரட்சி காதல், டிராமா காதல் என பல வகை இருக்கிறது. 100 வருட தமிழ் சினிமா காதலையும் எழுத்தில் விவரித்துவிட முடியாது என்பதால் இதோடு நிறுத்திக்கொள்கிறோம்.