நீ நீயாக இரு… நான் நானாக இருக்கிறேன் என்பது சந்தர்ப்பவாத, சுயநலக் காதலாகவே இருக்க முடியும்..!
ஒருவரின் செயல், தோற்றம், அவரின் நடை, உடை, பாவணை முதலியவற்றை கண்டவுடன் மாற்று பாலினத்தவருக்கு அவர் மீது ஒருவித ஈர்ப்பு வருவது இயற்கை . இதை காதல் என எண்ணி, பீச், பார்க், ஓட்டல்களில் ஐஸ்கிரீம், ஸ்நாக்ஸ், டேட்டிங் என, தினசரி பொழுதை, பேசிக் கழிக்கும் ஜோடிகளே அதிகம்.
ஆனால், இது போன்ற ஈர்ப்பால் இணைந்த ஜோடிகள், வெகு விரைவில், வெவ்வேறு திசை நோக்கி பயணிக்க துவங்கி விடுவர்.
ஆண் மீது பெண்ணுக்கும், பெண் மீது ஆணுக்கு ஏற்படும் மாற்றுப் பாலின ஈர்ப்பு, தற்காலி ஈர்ப்பா அல்லது தவிர்க்க முடியாத பிணைப்பா என்பதை பிரித்தறியும் பக்குவம் வந்த பின்னும், அந்த ஈர்ப்பு தொடர்ந்தால், அது தான் காதல்.
வெற்றி, தோல்வியை தீர்மானிக்க காதல் ஒன்றும் டி – 20 கிரிக்கெட் போட்டியல்ல. திருமணத்தில் முடியும் காதல் தான் வெற்றி பெறுவதாக சொன்னால், உலகில், 95 சதவீத காதலர்கள் தோல்வியை தழுவுவதாகத்தான் சொல்ல வேண்டும்.
காதல் ஒரு வித உணர்வு; அதை அனுபவிக்கையில் தெரியும் அதன் சுகமும், வலியும். ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுத்து, நன்கு புரிந்து கொண்டு, இருவரின் விருப்பு, வெறுப்புகள் வெவ்வேறாக இருந்தாலும், இருவருக்குமான மையப்புள்ளியில் இருவரும் பயணிப்பதே காதலின் வலிமை.
‛உனக்கு பிடிக்காததை நான் ஒதுக்குகிறேன் என, ஆண் மகன் நினைப்பதும், எனக்கு பிடிக்காவிட்டாலும், உனக்காக நான் இதை ஏற்கிறேன்’ என பெண் ஏற்பதுமே காதல். விட்டுக் கொடுத்தலும், புரிதலுமே இதில் முக்கியம். ‛நீ நீயாக இரு… நான் நானாக இருக்கிறேன். இருவரும் காதல் படகில் இனிதே பயணிப்போம்’ என்பது சந்தர்ப்பவாத, சுயநலக் காதலாகவே இருக்க முடியும்.
காதலிக்க துவங்கிய ஆரம்ப காலத்தில் இது நன்றாகவே இருக்கும். ஆயினும், நாள் செல்லச் செல்ல, இருவரிடையே மன வேதனையை ஏற்படுத்தும். அவன் எப்படியோ, அவனை அப்படியே ஏற்பதும், அவள் எப்படியோ, அவளை அப்படியே ஏற்பதும் தான் காதல். இது மேல்கூறிய கருத்துக்கு முரண்பட்டு இருக்கிறதே என எண்ண வேண்டாம்.
ஆம், அவன் எப்படியோ அவனை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்…அவன் மாற வேண்டும் என நினைப்பதை விட, அவனுக்காக நான் சிலவற்றை மாற்றிக் கொள்கிறேன் என முடிவெடுங்கள். ஆனால், உங்களுக்காக அவனும், தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாத மாற்றமாக அது இருக்க வேண்டும்.
அதே போல், அவள் எப்படி இருக்கிறாளோ, அவளை அப்படியே ஏற்று, அவளுக்காக ஆண் மகன் சிலவற்றை மாற்றிக் கொள்வதுமே காதல். இதிலும், எதிர்ப்புறம் எவ்வித மாற்றம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடாது.
ஒருவன் ஒரு சாலையின் ஒரு பக்கமும், அவனின் காதலி, அந்த சாலையின் மறு பக்கமும் நிற்கிறாள் என்றால், அவன் அளவை நோக்கியும், அவள், அவனை நோக்கியும் பயணிக்க வேண்டும்.
இருவரும் சந்திக்கும் புள்ளியிலிருந்து, புதிய திசையில் பயணிக்க வேண்டும். இருவரில் ஏவரேனும் ஒருவர், தங்கள் பயணத்தின் பக்கம் மற்றவரை இழுத்துச் செல்ல முயன்றால், அது காதலில் முறிவை ஏற்படுத்தும்.
இதுதான் விட்டுக் கொடுத்தலுக்கான தாத்பரியம். நீங்கள் உங்கள் பாதையிலிருந்து அவளை நோக்கி நடந்தால், அவளும் உங்களை நோக்கி நடப்பாள். இருவரில் யாரேனும் ஒருவர் நின்றுவிட்டு, எதிர்ப்புறம் உள்ளவரின் வரவை மட்டும் எதிர்பார்த்தால், அதில் ஏமாற்றமே மிஞ்சும்.
இந்த பார்முலா, திருமணம் ஆகாத காலதர்களுக்கானது மட்டுமல்ல, திருமணம் ஆகி, இல்லற வாழ்வில் ஈடுபட்டுள்ள தம்பதியருக்கும் பொருந்தும்.
வெவ்வேறு குடும்பங்களிலிருந்து, வெவ்வேறு பழக்க, வழக்கங்களை பின்பற்றி வந்த இருவர், திடீரென இணைந்து, இல்லற வாழ்வை துவங்கும் போது, மேற்சொன்ன உதாரணத்தின் படி வாழ்ந்தால், அந்த வாழ்வு சிறக்கும், இனிக்கும்.
காதல் திருணம் செய்த ஜோடிகளுக்கு, திருமணத்திற்கு பின்னும் காதல் இனிக்கும். திருமணம் செய்த பின், கணவன் – மனைவியிடையே மலரும் காதல் மணக்கும்.