காதலை நினைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் ஒருவித சுகமான வலி வேறு எந்த உணர்வுகளாலும் பெற்றுவிட முடியாது. ..!
உலகில் காதலிக்காதவர்கள் என்று எவரும் இருக்க முடியாது. காதலை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
இந்தியாவில் காதல் என்றால் முதலில் நினைவுக்கு வருவது காதல் சின்னமாய் இன்றும் நிலைத்து நிற்கும் ஷாஜகான் எழுப்பிய தாஜ்மஹால் தான்.
ஒரு காலத்தில், காதல் என்பது திருமணத்தில் நிறைவடையாத ஒன்றாக இருந்தது. ஆனால், அப்போதைய காதலை சொல்லும்போதே இனிக்கும்.
தூரத்தில் நின்று சிரிக்கும் சிரிப்பு. தொலைவில் இருந்து ரசிக்கும் அழகான பார்வை. கண்களாலே பேசிக்கொள்ளும் உரைநடை. கடிதம் மூலம் இனியவனுக்கோ, இனியவளுக்கோ எழுதிய கவிதை. அருகில் நிற்க ஐந்து நிமிடங்கள் கிடைத்தாலும் அதனை தயக்கத்துடன் எதிர்கொள்ளும் நிகழ்வு. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அவர்களின் காதல் ஆழத்தை. இவர்களில் பலர் ஒன்று சேராவிட்டாலும் காப்பியங்கள் வாயிலாகவும், கதைகள் மூலமாகவும் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது அவர்களது காதல்.
90’s காதல்… இது ஒரு பிரமிக்கத்தக்க காலம். ஏனென்றால் பல பிரச்சினைகள் மத்தியிலும் காதலர்கள் துணிச்சலாக பயணித்த காலம் இது. இந்த காலத்தை மிஸ்டுகால் காலம் என்றும் கூறலாம்.
ஏனென்றால், இந்த காலத்தில் காதலர்கள் மிஸ்டு கால் கொடுத்து பேசியதே அதிகம். காதலியையோ அல்லது காதலனையோ ஒருநாள் பார்க்காவிட்டாலும் ஒரு யுகமே பார்க்காதது போன்று உணர்ந்த காலம். பலர் காதலை சொல்லாமல் தவித்ததும் உண்டு. காதலை சொல்லி ஏற்றுக் கொள்ளாமல் இருந்ததும் உண்டு.
இதில் முக்கியமானது என்னவென்றால் காதலர்கள் தனது காதலை விட்டுக் கொடுக்க மனமின்றி பெற்றோரை எதிர்த்து, வீட்டை விட்டு சென்று சேர்ந்து வாழ்ந்ததும் உண்டு. அதே நேரத்தில் வீட்டில் கட்டாயப்படுத்தியதால் நேசித்தவரை பிரிய மனமின்றி வலிகளுடன் வேறு ஒருவரை திருமணம் செய்தவர்களும் உண்டு.
இப்படி காதல் பல வலிகளை தாண்டி இன்றும் உறவாகவோ அல்லது உயிராகவோ வாழ்ந்துகொண்டிருக்கிறது.
ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் காதலுக்கு எதிர்ப்புகள் குறைந்து, ஆதரவு அதிகரித்துள்ளதாலோ என்னவோ காதலை அதிகம் உணர முடியவில்லை.
எத்தனை தடைகள் இருந்தாலும் அனைத்தையும் தாண்டி சேர்ந்திட மாட்டோமா என்று ஏங்கிய காலம் போய்… காதலர்களே நமக்கு ஒத்து போகாது பிரிந்து விடுவோம் என பேசி பிரிந்து விடும் காலமாய் இருக்கிறது.
ஒரு காதல் மலர்ந்து ஆறு மாதங்களுக்கு மேல் செல்வதில்லை. அதற்குள் பல சண்டைகள் பல பிரிவுகள் அதோடு காதலை முடித்துக்கொள்கிறார்கள். அதன்பின் இந்த வலியை மறக்க இன்னொருவரை காதலிக்கிறார்கள். அதிலாவது நிலைத்து நிற்பார்கள் என்றால் அதுவும் இல்லை. இப்படி தொடர்ந்து கொண்டே போனால் அதன் பெயர் என்ன?
அனைவரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை ஏனெனில் இப்போதும் ஒரு சிலரின் காதல் உண்மையாக உள்ளது. காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு. அதை அனைவரும் உணர்ந்து உண்மையாக காதலித்து காதலுக்கு மதிப்பளிப்போம். காதல் என்ற பெயரில் மற்றவர்களை ஏமாற்றி தன்னையும் ஏமாற்றிக் காதலை கொலை செய்து விடாதீர்கள். காவியங்களிலும் கதைகளிலும் நிலைத்து நிற்கும் காதல் எப்போதும் நிலைத்து நிற்க வேண்டும்.
உண்மையாக ஒருவரை நேசியுங்கள் காதலியுங்கள். அவர் உங்களை ஏற்றுக்கொண்டாலும் சரி. ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி. அந்தக் காதலை நினைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் ஒருவித சுகமான வலி வேறு எந்த உணர்வுகளாலும் பெற்றுவிட முடியாது.
காதலை காதலிப்போம்..