ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்க முடியாது..!

கேரள மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 550 ரேஷன் கடைகளில் பிரதமரின் செல்ஃபி பாயின்ட்களை நிறுவ வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோடியின் போஸ்டர்கள் மற்றும் பேனர்களை ஒட்ட வேண்டும் என்றும், உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு மத்திய அரசின் லோகோக்கள் கொண்ட கேரி பேக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேரள மாநில உணவுத் துறைக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் விவாதம் எழுந்தது. அப்போது பேசிய கேரள உணவுத் துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில், “பிரதமர் மோடியின் புகைப்படம் கொண்ட 14,000 பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கேரள ரேஷன் கடைகளில் ஓட்ட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை செயல்படுத்த அதிகாரிகள் குழுவையும் நியமித்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழங்கப்படும் ரேஷன் விநியோக முறையை தேர்தல் விளம்பரத்துக்கு பயன்படுத்துவது சரியல்ல. விவாதங்களுக்கு பின் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அதேபோல் சட்டப்பேரவையில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் நீண்ட காலமாக ரேஷன் விநியோக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், அதில் இதுவரை இல்லாத வகையில் புதிய விளம்பர முறையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இது வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இது சரியல்ல என்பதனையும், கேரளத்தில் இதனை செயல்படுத்துவது கடினம் என்பதையும் மத்திய அரசிடம் தெரிவிப்போம். மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரமாக மத்திய அரசு இதனை பயன்படுத்தும் என்பதால், இந்த விவகாரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவும் கேரள அரசு முயற்சி எடுக்கும்.” என்று விளக்கம் அளித்தார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *