ஜனவரி 2024ல் அதிக இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியல்!
இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனை கடந்த ஜனவரி 2024-ல் ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பல பெரிய நிறுவனங்கள் தங்களது வாகன விற்பனையில் கடந்த மாதம் நேர்மறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஜனவரி 2024-ல் மட்டும் நாட்டில் சுமார் 14.16 லட்சத்திற்கும் மேற்பட்ட யூனிட்ஸ்கள் விற்பனையாகி இருப்பது இதற்கு சான்றாக உள்ளது. இந்த விற்பனை செய்யப்பட்ட யூனிட்ஸ்களின் எண்ணிக்கையை, கடந்த ஆண்டு இதே மாதம் அதாவது ஜனவரி 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சுமார் 26 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை டூ வீலர் செக்மென்ட் கண்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் அதிகம் விற்பனையான டாப் 5 டூ வீலர் பிராண்டுகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) :
ஹீரோ மோட்டோகார்ப் புத்தாண்டை கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஆம், 2024 ஜனவரியில் இரு சக்கர வாகன விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உள்நாட்டில் ஆதிக்கம் செலுத்தியது. ஆண்டுக்கு ஆண்டு (YoY) விற்பனையில் நிறுவனம் சுமார் 20.46 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஜனவரி 2023-ல் 3,49,437யூனிட்ஸ்களை விற்ற நிலையில், ஜனவரி 2024-ல் நிறுவனம் 4,20,934 யூனிட்ஸ்களை விற்றுள்ளது. அதாவது கடந்த ஜனவரியை விட இந்த ஜனவரியில் நிறுவனம் 71,497 யூனிட்ஸ்களை அதிகம் விற்றுள்ளது.
ஹோண்டா (Honda) :
ஹோண்டா நிறுவனத்தை பொறுத்தவரை அதன் ஆக்டிவா ஸ்கூட்டர் சிறப்பாக விற்பனையாகும் தயாரிப்பாக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 3,82,512 யூனிட்ஸ்களை விற்று, 2023 ஜனவரியில் விற்பனை செய்திருந்த 2,78,143 யூனிட்ஸ்களுடன் ஒப்பிடுகையில், 37.52 சதவீத வளர்ச்சியுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
டிவிஎஸ் (TVS) :
உள்ளூர் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் YoY-க்கு 23.91 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து, 2024 ஜனவரி மாதத்தில் மொத்தம் 2,68,233 யூனிட்ஸ்களை விற்பனை செய்துள்ளது. ஜனவரி 2023-ல் டிவிஎஸ் நிறுவனம் 2,16,471 யூனிட்ஸ்களை விற்பனை செய்திருந்தது. அதாவது கடந்த ஜனவரியை விட இந்த ஜனவரியில் நிறுவனம் 51,762 யூனிட்ஸ்களை அதிகம் விற்றுள்ளது.
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) :
பஜாஜைப் பொறுத்தவரை, பல்சர் பைக்குகள் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் தயாரிப்பாக தொடர்கின்றன. ஜனவரி 2024-ல் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 1,93,350 யூனிட்ஸ்கள் ஆகும். கடந்த ஆண்டு இதே மாதம் அதாவது ஜனவரி 2023-ல் நிறுவனம் மொத்தம் 1,42,368 யூனிட்ஸ்களை விற்பனை செய்துள்ளது. இது YoY வளர்ச்சியில் 35.8% அதிகரிப்பை கண்டுள்ளது.
சுசுகி (Suzuki) :
ஜப்பானிய டூ வீலர் தயாரிப்பு நிறுவனமான சுசுகி ஜனவரி 2024-ல் மொத்தம் 80,511 யூனிட்ஸ்களை விற்றுள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஜனவரி 2023-ல் மொத்தம் 66,209 யூனிட்ஸ்களை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில் தற்போது அதை விட 14,302 யூனிட்ஸ்களை அதிகம் விற்று ஆண்டு அடிப்படையில் 21.60 சதவீதம் அதிகம் விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
ராயல் என்ஃபீல்ட்(Royal Enfield) :
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் ஜனவரி 2024-ல் மொத்தம் 70,556 யூனிட்ஸ்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் 67,702 யூனிட்ஸ்களை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில் அதை விட 2854 யூனிட்ஸ்களை அதிகம் விற்று 4.22% YoY வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.