தள்ளிப்போகும் வேட்டையன்… அப்செட்டான ரஜினி ரசிகர்கள்!

ரஜினி கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படம், சென்றவாரம் வெளியாகி, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் மூன்று தினங்களில் தமிழ்நாட்டில் சுமார் 10 கோடி ரூபாயை லால் சலாம் வசூலித்துள்ளது. கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் படம் அட்டர் ப்ளாப்பாகியுள்ளது.
குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானாவில் லால் சலாமின் தெலுங்குப் பதிப்பு வெளியான முதல்நாளில், முதல் காட்சிக்கே ஆள்கள் இல்லாமல் பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பல திரையரங்குகளில் படத்தை மொத்தமாக தூக்கிவிட்டனர். அம்மாநிலங்களில் படத்தை வாங்கிய, விற்ற, திரையிட்ட அனைவரும் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
ரஜினியின் கௌரவ வேடம் என்பது ரசிகர்களுக்கு தொட்டுக்க ஊறுகாய் போன்றது. அவர்கள் எதிர்பார்ப்பது ஜெயிலர் போன்ற அன்லிமிடெட் மீல்ஸ். அந்த அனுபவத்தை வேட்டையன் படமே தர முடியும். த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் வேட்டையனில், முன்னாள் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக அவர் வருகிறார். அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு படத்தில் பஞ்சமில்லை. ரஜினி படங்களில் அதிகம் காணப்படாத அழுத்தமான கதையும் இதில் உள்ளது. அதாவது, ஒரு காலத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக, என்கவுண்டரை நியாயப்படுத்தி பேசிய போலீஸ்காரர் ரஜினி, பிறகு என்கவுண்டரின் அநீதியை பேசுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி ஆகியோரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, லைகா படத்தைத் தயாரிக்கிறது.
சமீபத்தில், விமான நிலையத்தில் பேட்டியளித்த ரஜினி, வேட்டையன் படத்தின் 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகவும், 20 சதவீத காட்சிகள் மட்டுமே இனி எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இதனால், படம் இன்னும் ஓரிரு மாதங்களில் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோடை விடுமுறைக்குப் பின் ஜுலை அல்லது ஆகஸ்டில் வேட்டையனை அவர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், வேட்டையனை தீபாவளிக்கு வெளியிட லைகா தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜுலை அல்லது ஆகஸ்டில் வேட்டையனை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றமளித்தாலும், வருகிற தீபாவளி வேட்டையன் தீபாவளியாக இருக்கும் என்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சிதான்.