கக்கூஸ் கழுவுகிறார்கள் சர்ச்சை பேச்சு: தயாநிதி மாறனுக்கு பீகார் காங். தலைவர் நோட்டீஸ்!
இந்தி பேசுபவர்கள் இங்கே கக்கூஸ் கழுவுகிறார்கள் என தயாநிதி மாறன் பேசியதாக பழைய வீடியோ சர்ச்சையான நிலையில், பீகார் காங்கிரஸ் தலைவரும், அரசியல் விவகாரக் குழு உறுப்பினருமான சந்திரிகா யாதவ், தி.மு.க எம்.பி., தயாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், 2019-ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பேசிய பழைய வீடியோவில், இந்தி கற்பவர்களையும் ஆங்கிலம் பேசுபவர்களையும் ஒப்பிட்டு, ஆங்கிலம் படித்தவர்கள் ஐ.டி நிறுவனங்களில் பணி புரிகிறார்கள், இந்தி பேசுகிற பீகாரிகள், உ.பி-காரர்கள் இங்கே கக்கூஸ் கழுவுகிறார்கள், ரோடு போடுகிறார்கள் என்று பேசியது சர்ச்சையானது.
இந்த வீடியோவைப் பகிர்ந்த பா.ஜ.க தலைவர்கள் மற்றும் பா.ஜ.க ஆதரவு நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து தி.மு.க எம்.பி தயாநிதி மாறனுக்கு கண்டனம் தெரிவித்ததால் பெரும் சர்ச்சையானது.
மேலும், இந்தி பேசுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக கக்கூஸ் கழுவுகிறார்கள் என்று பேசிய தி.மு.க எம்.பி தயாநிதி மாறனுக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று பா.ஜ.க தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, பீகார் துணை முதல்வரும் ஆர்.ஜே.டி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தி.மு.க எம்.பி தயாநிதி மாறனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதனால், இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்தி பேசுபவர்கள் கக்கூஸ் கழுவுகிறார்கள் என்று பேசியதற்கு தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் உள்ளூர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் காங்கிரஸ் தலைவரும், அரசியல் விவகாரக் குழு உறுப்பினருமான சந்திரிகா யாதவ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பீகார் காங்கிரஸ் தலைவர் சந்திரிகா யாதவ், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், பல பீஹாரிகள் அதிகாரமிக்க உயர் பதவிகளிலும் பிற முக்கிய அரசுப் பணிகளில் முக்கிய பதவிகளையும் வகிக்கிறார்கள் என்பது தயாநிதி மாறனுக்குத் தெரியாது என்று கூறினார்.
“இந்தக் கருத்து மிகவும் ஆபத்தானது. வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பிளவை ஏற்படுத்த தயாநிதி மாறன் முயற்சிப்பதாகத் தோன்றுகிறது” என்று சந்திரிகா யாதவ் ஊடகங்கள் கருத்துக் கேட்டபோது தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் ஊடகத் துறைத் தலைவர் ராஜேஷ் ரத்தோர், இந்த மொத்த சர்ச்சைக்கும் பா.ஜ.க-தான் காரணம் என்று கூறினார்.
“தயாநிதி மாறன் இந்தக் கருத்துக்களை 2019-ல் தெரிவித்தார். அது 2023-ல் மீண்டும் பரப்பப்பட்டுள்ளது. இது அரசியல் சதியின் ஒரு பகுதியாகத் தெரிகிறது, குறிப்பாக மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் இப்படி செய்துள்ளனர்” என்று ரத்தோர் தெரிவித்துள்ளார்.