கொரியன் டிராமா, BTS தாண்டி இப்போ இந்தியாவை ஆளும் கெரியன் டிரெண்ட்.. நினைத்துக்கூடப் பார்க்கவில்லை..!!
இந்தியாவுக்கும், கொரியாவுக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருப்பது போல் இன்றைய தலைமுறையினர் கொரியன் காலச்சாரத்தை அதிகளவில் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு தலைமுறைக்கும், ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு வெளிநாட்டு டிரெண்டை பாலோ செய்தனர்.
80களில் இந்தியாவில் அமெரிக்க இசை இளைஞர்களை ஆட்கொண்டது குறிப்பாக நகரத்து இளைஞர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது. இதைத் தொடர்ந்து 90களில் ஜப்பானிய தயாரிப்புகளில் இந்திய மக்கள் அதிகம் விரும்பி வாங்கினர், 2000 காலகட்டத்தில் அமெரிக்க டிரெண்ட் பெரும் ஆதிக்கம் செலுத்தியது.
கொரியன் டிரெண்டின்: 2010களில் ஐரோப்பியே பேஷன் டிரெண்ட் இந்தியாவில் அதிகமாக இருந்தது இந்த வகையில் கடந்த 15 வருடத்தில் இந்திய இளம் தலைமுறையினர் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 2K கிட்ஸ் மத்தியில் கொரியன் டிரெண்டின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.
கொரியன் மாயை: 90ஸ் கிட்ஸ் பலரும் கொரியன் டிராமா பார்ப்பதுடன் நிறுத்திகொண்டாலும் இந்த 2கே கிட்ஸ் கொரியன் உலகில் சிக்கிக்கொண்டு உள்ளனர் என்றால் மிகையில்லை. இதன் எதிரொலியாக இந்தியாவில் கொரியன் டிராமா, கொரியன் பாப், கொரியன் பியூட்டி, கொரியன் உணவு எனப் பலவற்றை இந்திய வர்த்தகச் சந்தை ஆட்சி செய்து வருகிறது.
ஜப்பான் டிரெண்ட்: இதேவேளையில் ஒரு கூட்டம் ஜப்பான் இளம் தலைமுறையினரின் டிரெண்டை பாலோ செய்யத் துவங்கியுள்ளது, அடுத்த 10 வருடத்தில் இதுவும் டிரெண்டாக வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்று சந்தையில் பெரும் ஆதிக்கம் செலுத்துவது கொரியன் டிரெண்ட் தான்.
கொரியன் டிரெண்ட் விரிவாக்கம்: கொரியன் டிராமா, கொரியன் பாப் இசை உடன் இருந்த இளம் தலைமுறையினர் தற்போது பியூட்டி, உணவு மீது ஆர்வத்தைத் திருப்பியதால் புதிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
பிஸ்னஸ்: இந்தியாவில் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வரையில் புதிய கொரிய பேகேஜ் உணவுகளையும், கொரியன் பியூட்டி பொருட்களையும் அறிமுகம் செய்யத் துவங்கியுள்ளனர்.
கரீனா கபூர்: பாலிவுட் ஹீரோயின் கரீனா கபூர் கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் பிரபலமான சுகர் காஸ்மெட்டிக்ஸ் பிராண்டின் தாய் நிறுவனமான வெல்வெட்டே லைப்ஸ்டைல் உடன் இணைந்து Quench Botanics என்ற தனி நிறுவனத்தை உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் வாயிலாகக் கொரியன் பியூட்டி பொருட்களை விற்பனை செய்யும் முயற்சியில் இறங்க உள்ளார் கரீனா கபூர்.
கொரியன் பியூட்டி பொருட்கள்: இதுகுறித்து Vellvette Lifestyle நிறுவனம் கூறுகையில் உலகளாவிய ஸ்கின் கேர் பிரிவில் கொரியன் பியூட்டி பொருட்கள் தற்போது பெரும் ஆதிக்கத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் இப்பிரிவு வர்த்தகம் பெரும் வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளது. Quench Botanics அடுத்த 12 மாதத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
NYKAA மற்றும் TIRA: இதேபோல் பல மாதங்களுக்கு முன்பே இந்தியாவில் கொரியன் டிரெண்ட் வருவதை உணர்ந்த NYKAA மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் பிராண்டின் TIRA ஆகியவை 100க்கும் அதிகமான கொரியன் பிராண்ட் பொருட்களை வாங்கிக் குவித்து வைத்துள்ளது.
பார்பிக்யூ நூடில்ஸ்: அடுத்தாக இந்தியாவில் முன்னணி FMCG பிராண்டான நெஸ்லே தனது நூடில்ஸ் பிராண்டான மேகி கீழ் புதிதாகக் கொரியன் பார்பிக்யூ நூடில்ஸ்-ஐ 2 மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால் சாதாரண மேகி நூடில்ஸ் பாக்கெட் விலையைக் காட்டிலும் இது 2 மடங்கு அதிக விலையில் விற்கப்பட்டது.
இளம் தலைமுறையினரை டார்கெட் செய்து விற்கப்படும் வேளையில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறத் துவங்கியுள்ளது.
முக்கிய ஆய்வு: கொரியன் நூடில்ஸ் குறித்து NielsenIQ செய்த ஆய்வில் இந்தியாவில் வெறும் 2 கோடி ரூபாயாக இருந்த இதன் வர்த்தகம், 2023ல் 65 கோடி ரூபாய் மதிப்புடைய வர்த்தகச் சந்தையாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதேகாலகட்டத்தில் இன்ஸ்டென்ட் நூடில்ஸ் வர்த்தகம் வெறும் 10 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர்: மேலும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் Knorr பிராண்டில் கீல் கொரியன் மீல் பாட்ஸ், டாப் ராமென் கெய்கி கே-நூடில்ஸ் (Geki K-noodles), மொய் சோய் நூடில்ஸ் (Moi Soi) மற்றும் சாஸ் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது.