லால் சலாம் கொடுத்த தைரியம்.. அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய விஷ்ணு விஷால்!
சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார் விஷ்ணுவிஷால். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான லால்சலாம் படத்தில் இவரின் நடிப்பு பாராட்டை பெற்று வரும் நிலையில், நடிகர் விஷ்ணுவிஷால் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுசீந்திரன் இயக்கிய 2009ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் வெண்ணிலா கபடிக்குழு. இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் விஷ்ணு விஷால். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் நல்ல நடிகர் என்ற பெயர் கிடைத்தது. இந்த படம் விஷ்ணு விஷாலுக்கு மட்டுமில்லாமல், அப்புக் குட்டி, சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோருக்கு நல்ல எதிர்காலத்தை கொடுத்தது.
விஷ்ணு விஷால்: இந்த திரைப்படத்தை தொடர்ந்து, பலே பாண்டியா, துரோகி, குள்ளநரிக்கூட்டம், இன்று நேற்று நாளை, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அவர் நடித்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் வெளியானது. கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும், விஷ்ணு விஷாலின் கரியரிலேயே முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது ராட்சசன். முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம்குமார் இயக்கியிருந்த அந்தப் படம் த்ரில்லர் ஜானரில் வெளியாகி சக்கைப்போடு போட்ட இத்திரைப்படத்தில், விஷ்ணு விஷாலின் நடிப்பும் அட்டகாசமாக இருந்தது.
அதிரடியாக சம்பள உயர்வு: இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான லால் சலாம் திரைப்படம் வெளியானது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில், விஷ்ணு விஷாலுடன் இணைந்து விக்ராந்த் லீடு ரோலில் நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், தனது சம்பளத்தை அதிரடியாக எட்டு கோடி ரூபாய் வரை உயர்த்தி இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான மோகன்தாஸ் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகாமல் கிடப்பில் உள்ள நிலையில். அடுத்து ஆரியன் என்னும் படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.
விஷ்ணு விஷாலின் தம்பி ஹீரோ: நடிகர் விஷ்ணு விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் உடன் இணைந்து புதிய படத்தை தயாரிக்க உள்ளார். ‘ஓஹோ எந்தன் பேபி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி, கதை நாயகனாக அறிமுகப்படுத்த உள்ளார். மாடர்ன் லவ் சென்னை என்ற வெப் சீரிஸுக்காக ‘காதல் என்பது கண்ணுலே ஹார்ட் இருக்குற எமோஜி’ எபிஸோடை இயக்கிய, முன்னணி விளம்பரப் பட இயக்குநரும், குணச்சித்திரக் கலைஞருமான கிருஷ்ணகுமார் ராம்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கான படபூஜை அண்மையில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.