ஐபிஎல்-இல் சொதப்பினால்.. இந்திய வீரர்களுக்கு செக் வைத்த பிசிசிஐ.. டி20 உலகக்கோப்பை அதிரடி பிளான்
2024 ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லையோ அந்த அணியில் இடம் பெற்றுள்ள இந்திய டி20 அணி வீரர்களுக்கு கிடுக்கிப்பிடி போட முடிவு செய்துள்ளது பிசிசிஐ.
2024 டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக இரண்டு மாத காலம் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி, ஐபிஎல் தொடரின் இடையே தேர்வு செய்யப்பட உள்ளது. ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாட்டை வைத்தே உலகக்கோப்பைக்கான இந்திய டி20 அணி தேர்வு செய்யப்படும்.
அது ஒருபுறம் இருக்க, அப்படி தேர்வு செய்யப்படும் வீரர்களின் ஐபிஎல் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றால், அந்த வீரர்களை லீக் சுற்றின் முடிவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது பிசிசிஐ.
இதில் இரண்டு விஷயம் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு ஐபிஎல் அணி சரியாக செயல்படவில்லை என்றால் அதில் இடம் பெற்றுள்ள இந்திய டி20 அணி வீரரின் செயல்பாடு சராசரியாக அல்லது மோசமாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, அதனை டி20 உலகக்கோப்பை தொடங்கும் முன் சரி செய்ய வேண்டும். அதற்கு தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்காக அந்த வீரர்களை மட்டும் முன்பே நியூயார்க் அனுப்ப முடிவு செய்து இருக்கிறது பிசிசிஐ.
இரண்டாவது விஷயம், ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்று சுமார் ஒரு வார காலம் நடக்கும். பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற வீரர்கள் எப்படியும் தங்கள் ஐபிஎல் அணிக்காக ஆட வேண்டும் என்பதால் அதற்காக பயிற்சி செய்வார்கள், போட்டிகளில் ஆடுவார்கள். அவர்களுக்கு டி20 உலகக்கோப்பைக்கு ஒரு வாரம் முன்பு அதுவே சிறந்த பயிற்சியாக அமையும்.
எனவே, இந்த முறை நீண்ட ஐபிஎல் தொடரிலும் ஆடி விட்டு, உடனுக்குடன் ஓய்வே இல்லாமல் டி20 உலகக்கோப்பைக்கு பயிற்சியையும் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் இந்திய வீரர்கள். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு மட்டுமே இதில் விதிவிலக்கு அளிக்கப்படும். சரியாக ஆடாத வீரர்கள் ஓய்வே இல்லாமல் பயிற்சி செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.