இந்திய அணியில் தமிழக வீரருக்கு எதிராக சதி? உண்மையை போட்டு உடைத்த வருண் சக்கரவர்த்தி

இந்திய டி20 அணியில் 2021ஆம் ஆண்டில் ஆறு போட்டிகளில் மட்டும் ஆடி இருந்தார் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி. அதன் பின் அவருக்கு இந்திய டி20 அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அது குறித்த உண்மைகளை ஒரு பேட்டியில் உடைத்து இருக்கிறார் வருண் சக்கரவர்த்தி.

2020 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றார் தமிழக சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி. “மிஸ்டரி ஸ்பின்னர்” என அழைக்கப்பட்ட அவர் 2020 ஐபிஎல் தொடரில் 17 விக்கெட்களையும், 2021 ஐபிஎல் தொடரில் 18 விக்கெட்களையும் வீழ்த்தினார். இதை அடுத்து அவரை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.

2021 ஐபிஎல் முடிந்த உடன் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டி20 அணியில் இடம் பெற்று மூன்று போட்டிகளில் ஆடினார் வருண் சக்கரவர்த்தி. அதன் பின் 2021 டி20 உலகக்கோப்பை அணியிலும் இடம் பெற்ற அவர் அதிலும் மூன்று போட்டிகளில் மட்டுமே இடம் பெற்றார்.

2021 டி20 உலகக்கோப்பை முடிந்த சமயத்தில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அது இரண்டு வாரத்தில் குணமாகி விட்டது. அதன் பின் நடந்த டி20 தொடர்களில் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு காயம் இருப்பதால் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்ற தகவல் மட்டும் அவ்வப்போது வெளியானது. ஆனால், தனக்கு காயமே இல்லாத போதும், காயத்தால் அணியில் தேர்வு செய்யவில்லை என்ற தகவலை சிலர் தங்கள் ஆதாயத்துக்காக பரப்பி இருக்கலாம் என தற்போது ஒரு பேட்டியில் கூறி அதிர வைத்துள்ளார் வருண் சக்கரவர்த்தி.

தன்னை இந்திய அணியில் இருந்து பொய்யான காரணத்தால் ஒதுக்கி வைத்த நிலையில் மனமுடைந்த வருண் சக்கரவர்த்தி 2022 ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் வெறும் 6 விக்கெட் மட்டுமே வீழ்த்தி சொதப்பி இருந்தார். எனினும், அதில் இருந்து மீண்டு தன் மனதை தேற்றிக் கொண்டு 2023 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு 14 போட்டிகளில் 20 விக்கெட்களை அள்ளினார்.

இது பற்றி வருண் சக்கரவர்த்தி கூறுகையில், “இரண்டு, மூன்று வாரத்தில் அந்த காயம் குணமான பின்னும் தன்னை அணியில் தேர்வு செய்யாமல் இருக்க அதே காரணம் கூறப்பட்டதாகவும், அது வெறும் வதந்தியா அல்லது சிலர் என்னை அணியில் இருந்து தள்ளி வைக்க இதை பரப்பினார்களா என எனக்கு தெரியவில்லை. அதனால் என்னை நிரூபிக்க வேண்டி என் பந்துவீச்சில் நிறைய மாற்றம் செய்தேன், என் மன நிம்மதி பறிபோனது. அது என்னை பெரிதாக பாதித்தது. அதனால் நான் 2022 ஐபிஎல் தொடரில் சரியாக செயல்படவில்லை. அதன் பின் தொழில்முறை கிரிக்கெட்டில் யாரும் நமக்கு உதவ மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டேன்” என்றார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *