துப்பு கொடுத்தால் 50 பைசா சன்மானம்…! விநோத பரிசு அறிவித்த போலீசார்…! எங்கு தெரியுமா?
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தலைமறைவாக இருந்தால் அவர்களை கண்டு பிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்குவது அரச காலத்தில் இருந்தே தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம். குற்றத்தின் அளவை பொறுத்து அந்த சன்மானத்தின் மதிப்பு ஆயிரம், லட்சம், கோடி என நிர்ணயம் செய்யப்படும்.
தற்போதும், பெரிய குற்றவழக்குகளில் தேடப்படுவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு போலீசார் சன்மானம் வழங்கி வருகின்றனர். ஆனால், இது தொடர்பாக ராஜஸ்தான் போலீசார், கொஞ்சம் விநோதமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் சிங்கானா என்ற இடத்தில் யோகேஷ் மேக்வால் என்பவர் மீது போலீசார் ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். யோகேஷ் திடீரென மாயமான நிலையில், போலீசார் தேடிவருகின்றனர்.
இந்நிலையில் தலைமறைவான யோகேஷ் குறித்து தகவல் தருவருக்கு 50 காசுகள் சன்மானமாக வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சுற்றுவட்டாரம் முழுவதும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.
இந்த வினோத அறிவிப்பு பொதுமக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், ஜுன்ஜுன் மாவட்ட எஸ்பி தேவேந்திர விஷ்னோய் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “குற்றவாளிகளின் மதிப்பு 50 பைசாதான். அதுகூட தற்போது புழக்கத்தில் இல்லை. குற்றவாளிகளுக்கு எப்போதும் சமூகத்தில் மதிப்பு இல்லை என்பதை குறிக்கும் வகையிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.” இவ்வாறு அவர் கூறினார்.
ராஜஸ்தான் மாநில போலீசின் இந்த சமயோஜித யோசனை பல்வேறு தரப்பில் பாராட்டை பெற்றுள்ளது.