அமீரகத்தில் உருவாகிறது பிரம்மாண்ட பாரத் மார்ட்; எதற்காக இந்த மார்ட்?
பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இரண்டு நாட்கள் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்கும் பிரதமர் இன்று அபுதாபியில் கட்டப்பட்டு இருக்கும் நாராயணன் கோவிலை திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.
முன்னதாக, இந்தியாவுக்கும் அபுதாபிக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் படி அபுதாபியில் இந்தியா மார்ட் உருவாகி வருகிறது. இந்த மார்ட்டில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை காட்சிபடுத்தலாம். இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களது தயாரிப்புகளை இந்த மார்ட்டில் ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்தலாம் என்று தெரிய வந்துள்ளது. ஆனால், எந்த கருப்பொருளின் அடிப்படையில் இந்த மார்ட் அமைக்கப்படும் என்பது குறித்து உடனடியாக தெரிய வரவில்லை. இந்த மார்ட் வரும் 2025ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த மார்ட் சுமார் ஒரு லட்சம் சதுர மீட்டரில் அமைக்கப்படுகிறது. இதில் கிடங்கு, சில்லறை விற்பனை, விருந்தோம்பல் கட்டிடங்கள் என்று அனைத்தும் இடம் பெறும். இந்த மார்ட் ஜெபல் அலி ப்ரீ சோனில் அமைக்கப்படுகிறது. ஷோரூம், கிடங்குகள், அலுவலகங்கள், பொருட்களுக்கு தனித் தனி கிடங்குகள் மற்றும் கனரக இயந்திரங்களில் இருந்து விரைவில் கெட்டுப் போகும் பொருட்கள் என்று அனைத்துக்கும் தனி தனி கிடங்குகள் அமைக்கப்படுகிறது. மேலும், இந்த மார்ட்டில் இருந்து டிஜிட்டல் முறையில் வர்த்தகம் செய்யவும் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரு நாடுகளும் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் (CEPA) கீழ் பெட்ரோலியம் அல்லாத வர்த்தக இலக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளதால் பாரத் மார்ட் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிரதமர் மோடி:
அபுதாபிக்கு நேற்று சென்று இருக்கும் பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்றார். பிற்பகலில், இரு தலைவர்களும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, ஃபின்டெக், எரிசக்தி, உள்கட்டமைப்பு, கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உட்பட பல்வேறு துறைகளில் விரிவான கூட்டாண்மை ஆழமாக இருப்பதை இரு தலைவர்களும் வரவேற்றனர். மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் விவாதங்கள் நடத்தினர்.