‘பிரதமர் மோடி பஞ்சாப் வந்தால் தப்பிச் செல்ல முடியாது’: விவசாயிகள் போராட்டத்தில் பகிரங்க மிரட்டல்

நடந்துவரும் விவசாயிகளின் போராட்டத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு விவசாயி வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துப் பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், அந்த நபர் பிரதமர் மோடி மீண்டும் பஞ்சாபில் கால் வைக்கத் துணிந்தால், மோசமான விளைவுகள் காத்திருக்கின்றன என்று மிரட்டுகிறார்.

இந்தப் பேச்சின் அச்சுறுத்தும் தொனியானது, நாடு முழுவதும் சர்ச்சைக்கும் அமைதியின்மையையும் ஏற்படுத்தக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்தப் பேச்சு விவசாயிகள் போராட்டத்தைச் சுற்றி அதிகரித்து வரும் பதட்டத்தை அதிகரிக்கச் செய்துள்ளது..

“மோடி கடந்த முறை பஞ்சாபிலிருந்து தப்பிவிட்டார். இந்த முறை பஞ்சாப் வந்தால் அவர் தப்பிக்க மாட்டார்” என்று பேசும் வீடியோ ட்விட்டரில் வைரலாகப் பரவி வருகிறது.

விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாகச் செல்லத் திட்டமிட்டுள்ள நிலையில், புதன்கிழமை பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாகியுள்ளன. டெல்லி நகருக்குள் நுழையும் எல்லைப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மத்திய டெல்லி மற்றும் ஹரியானா எல்லைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

சிங்கு (டெல்லி-சோனிபட்) மற்றும் திக்ரி (டெல்லி-பஹதுர்கர்) எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. நிலைமையை கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சிங்கு, திக்ரி மற்றும் காஜிபூர் எல்லைகளில் பல அடுக்கு தடுப்புகள், கான்கிரீட் தடைகள், ஆணிகள் மூலம் விவசாயிகள் அணிவகுப்பு நகருக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளிலும் மத்திய டெல்லியிலும் தேவைப்பட்டால், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்தலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த நடவடிக்கைகள் காரணமாக டெல்லிக்குள் செல்லும் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் “டெல்லி சலோ” விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்துகின்றன. பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

செவ்வாயன்று, டெல்லிக்குள் செல்ல முற்பட்ட விவசாயிகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடுத்து நிறுத்தப்பட்டனர். இரவு வெகுநேரம் வரை, அவர்கள் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் ஹரியானா காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *