பாதை மாறும் எதிர்நீச்சல்… புதிய கேரக்டரில் கில்லி பட நடிகை : ஜனனிக்கு சோதனையா?
சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்றான எதிர்நீச்சல் சீரியலில் நாயகி ஜனனியின் அப்பத்தா கேரக்டரில் நடிகை டி.கே.கலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கில்லி படத்தில் பிரகாஷ் ராஜுன் அம்மாவாகவும், குருவி படத்தில் விஜயின் அம்மாவாகவும் நடித்துள்ளார்.
தனது ஒளிபரப்பை தொடங்கியதில் இருந்து டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் சீரியல் எதிர்நீச்சல். ஆணாதிக்கம், பெண்களின் வாழ்வுரிமையை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், வேல ராமமூர்த்தி, மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலின் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சீரயிலில் குணசேகரனின் அப்பத்தா பட்டம்மாள் பி.ஏ என்று சொல்லும்போதும், ஆதிரையின் திடீர் திருமணத்தின்போதும், டி.ஆர்.பி ரேட்டிங்கில் உச்சம் தொட்டது. அதன்பிறகு குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் மரணம் சீரியலுக்கு சற்று சறுக்கலை ஏற்படுத்தினாலும், டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் 5 இடங்களில் இருந்து வருகிறது.
இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு, குணசேகரனின் அப்பத்தா காரில் செல்லும்போது கார் வெடித்து விபத்தில் சிக்கினார். இப்போது அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வீட்டில் உள்ள பெண்களை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்லும் வகையில் ஜனனி பல வேலைகளை செய்து வருகிறார். இதில் அவருக்கு போட்டியாள அவரது அண்ணன்களே வில்லன்களாக களமிறங்கியுள்ளனர்.
ஜனனியின் அப்பாவின் அண்ணன் மகன்கள் கிருஷ்ணசாமி மெய்யப்பன், ராமசாமி மெய்யப்பன் ஆகிய இருவரும் எதிர்நீச்சலில் புதிய வில்லன்களாக அறிமுகமாகியுள்ள நிலையில், தற்போது புதிதாக ஜனனியின் அப்பா நாச்சியப்பனின் அம்மாவாக நடிகை டி.கே.கலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கில்லி படத்தில் பிரகாஷ்ராஜூன் அம்மாவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டி.கே.கலா.
தொடர்ந்து, வெயில், கஸ்தூரிமான், குருவி, ஐ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இவர், ஒரு பாடகரும் கூட. கடந்த 1973-ம் ஆண்டு வெளியான அகத்தியர் என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான இவர், பல படங்களில் பாடியுள்ளார். கடைசியாக விஷாலின் சிவப்பதிகாரம் படத்தில் பாடல் பாடியிருந்தார். இந்த படம் 2006-ம் ஆண்டு வெளியானது.
ஏற்கனவே ஜான்சிராசி வீட்டுக்குள் இருந்து பிரச்சனை செய்து வரும் நிலையில், புதியதாக வர உள்ள ஜனனியின் அப்பத்தா அவருக்கு துணையாக இருப்பாரா அல்லது எதிரியாக மாறுவரா என்பது பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.