முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் பாஜகவில் இணைந்தார்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இந்தியா எனும் பெயரில் கூட்டணி அமைத்து ஓரணியில் திரண்டுள்ளது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜகவுக்கு சாதகமாகவே உள்ளன. அதேபோல், எதிர்க்கட்சிகளின் கூட்டணியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் மீண்டும் ஐக்கியமாகியுள்ளார். திரிணாமூல், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இத்தகைய பிரச்சினைகள் இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். உத்தரப்பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் முன்னிலையில் விபாகர் சாஸ்திரி பாஜகவில் இணைந்துள்ளார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், லால் பகதூர் சாஸ்திரியின் ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற தொலைநோக்கு பார்வையை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு சேவை செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.” என்றார். மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், விபாகர் சாஸ்திரி பாஜகவில் இணைந்துள்ளார். அவருக்கு இந்த தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் எம்.பி.யுமான அசோக் சவான், காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் நேற்று இணைந்த நிலையில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *