வசந்த பஞ்சமியில் வாராஹி, சரஸ்வதி வழிபாடு, பலன்கள் !
ஒவ்வொரு மாதமும் அமாவாசயை அடுத்த 5 வது நாள் பஞ்சமி திதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பஞ்சமியுமே விசேஷம் என்றாலும் மாசி மாதம் வரும் பஞ்சமி பெரும் சிறப்பு வாய்ந்தது.
இந்த பஞ்சமி வசந்த பஞ்சமியாக கொண்டாடப்படுகிறது.
வசந்தபஞ்சமி திதியில் வாராஹியை வழிபட்டு வந்தால் எதிரிகளிடம் இருந்து நம்மை காத்து அருள்வாள் வாராஹி அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் இன்னல்கள், இடர்ப்பாடுகள், எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றி கொள்ள வைக்கும் வழிபாடு தான் வாராஹி வழிபாடு.
வசந்த பஞ்சமி பண்டிகை பல மாநிலங்களில் சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் சரஸ்வதி வழிபாட்டுக்கு உகந்த தினமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் உண்மையான பக்தியுடன் சரஸ்வதி தேவியை வழிபடுபவர்களுக்கு கல்வி கேள்விகளில் மேன்மை பெறுவர் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.
அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் கொண்டாடிய வாராஹி. இவளே நம் அனைத்து இன்னல்களில் இருந்தும் காப்பவளாக இருக்கிறாள். சப்த மாதர்களில் ஐந்தாவதாக இருக்கும் வாராஹியே சேனாதிபதி. இவள் விஷ்ணுவின் அம்சமாக திகழ்வதால் பாண்டவர்களை துன்பங்களிலிருந்து விடுவித்ததை போல நம்மை துன்பங்களிலிருந்து விடுபடச் செய்யவும் , எதிரிகளிடமிருந்து நம்மை காக்கவும் வாராஹி வழிபாடு சாலச் சிறந்தது.
இந்நாளில் அதிகாலை எழுந்து, குளித்து நீராடி, வீட்டிலிருக்கும் பூஜையறையில் குலதெய்வ வழிபாடு, விநாயகர் பூஜை செய்ய வேண்டும். விரல் மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடலாம். வேண்டுதல்களை நிறைவேற சங்கல்பம் செய்து , எளிய ஸ்லோகங்களில் ஆராதனை செய்யலாம். பச்சை கற்பூரம் கலந்த பால்,தோலுடன் கூடிய உளுந்து வடை , வெண்ணெய் சேர்த்த தயிர் சாதம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எள்ளுருண்டை இவற்றை நைவேத்தியமாக வைத்து வழிபடுவதூ சிறப்பான பலன்களை தரும்.