Bharat Mart: சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவின் மெகா திட்டம்.. அதுவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில்..!!!
இந்திய பிரதமர் UAE சென்றுள்ள நிலையில் பாரத் மார்ட் என்னும் அரசின் சொந்த கிடங்கை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மண்ணில் நிறுவ திட்டமிட்டுள்ளது. சீனாவுடன் அனைத்து முனையிலும் போட்டிப்போடத் தயாராகியிருக்கும் இந்தியா-வின் முக்கியமான முயற்சி தான் இந்த பாரத் மார்ட்.
சீனா டிராகன் மார்ட் என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வரும் வேளையில், இதேபோன்ற திட்டத்தை இந்தியாவும் அறிவித்துள்ளது. பாரத் மார்ட் என்பது ஒரே கூரையின் கீழ் ஏற்றுமதியாளர்கள் பல்வேறு வகையான பொருட்களை வர்த்தகர்களுக்குக் காட்சிப்படுத்தும் ஒரு ஒருங்கிணைந்த தளமாகும்.
இந்திய அரசு பாரத் மார்ட் திட்டத்தின் கான்செப்ட்-ஐ இன்னும் இறுதி செய்யாத நிலையில் முழுமையான விபரம் வெளியாகவில்லை. இந்த வசதி 2025க்குள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு, UAE-யில் உருவாக்கும் பாரத் மார்ட் சுமார் 100,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டிருக்கும். இந்தத் தளம் கிடங்கு, சில்லறை விற்பனை மற்றும் விருந்தோம்பல் எனக் கலவையான சேவைகளை வழங்கும் தளமாகச் செயல்படும் எனத் தெரியவந்துள்ளது.
இந்தப் பாரத் மார்ட், டிபி வேர்ல்ட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஜெபல் அலி ஃப்ரீ ஸோனில் (JAFZA) அமைக்கப்படும். பாரத் மார்ட் ரீடைல் ஷோரூம், கிடங்குகள், அலுவலகங்கள் மற்றும் பிற துணை வசதிகளைக் கொண்டு இருக்கும். இந்த இடத்தில் கனரக இயந்திரங்கள் முதல் அனைத்து பொருட்களின் வர்த்தகத்திற்கும் இடமளிக்கப்படும்.
மேலும், பார்த் மார்ட் டிஜிட்டல் உலகிலும் கால்தடம் பதிக்கத் திட்டமிட்டு உள்ளது. உலகெங்கிலும் உள்ள வாங்குபவர்களுக்கு (Buyers) இந்திய தயாரிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வர இந்த டிஜிட்டல் தளம் சிறப்பானதாக அமையும்.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரு நாடுகளும் மத்தியில் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தின் (CEPA) கீழ் பெட்ரோலியம் அல்லாத பொருட்கள் சார்ந்த வர்த்தகத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் என்ற இரட்டிப்பு இலக்கை அடைய பாரத் மார்ட் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை அபுதாபி சென்ற பிரதமர் நரேந்திர மோடியை ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்றார். பிற்பகலில், இரு தலைவர்களும் நேரில் சந்தித்துக்கொண்டு மூத்த அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் வர்த்தகம் மற்றும் முதலீடு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, ஃபின்டெக், எரிசக்தி, உள்கட்டமைப்பு, கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உட்படப் பல்வேறு துறைகளில் விரிவான கூட்டணியை உருவாக்க இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.