இலங்கையர்கள், இந்தியர்களை குறிவைத்து வெளியேற்றும் மாலத்தீவு., பட்டியலில் சீனர்கள் இல்லை
இலங்கை, இந்தியா உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை மாலத்தீவு வெளியேற்றுவதற்காக அறிவித்துள்ளது.
இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில், 43 இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதாக மாலத்தீவு அறிவித்துள்ளது.
மாலத்தீவில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாலத்தீவு ஊடகமான அதாடுவின் படி, 12 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 186 குடிமக்களை நாட்டிலிருந்து வெளியேற்ற மாலத்தீவு முடிவு செய்துள்ளது.
ஆனால், அதில் ஒரு சீனக் குடிமகனின் பெயர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அறிக்கையின்படி, அதிகபட்சமாக 83 பங்களாதேஷ் குடிமக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். இதைத் தொடர்ந்து, இந்தியர்கள் (43) இரண்டாவது இடத்திலும், இலங்கையர்கள் (25) மூன்றாவது இடத்திலும், நேபாள குடிமக்கள் (8) நான்காவது இடத்திலும் உள்ளனர்.
எவ்வாறாயினும், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான கடைசித் திகதி என்ன என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.
சட்டவிரோதமாக வியாபாரம் செய்பவர்களுக்கு நாட்டில் இடமில்லை..
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலத்தீவு உள்துறை அமைச்சகம், நாட்டில் சட்டவிரோதமாக இயங்கும் வணிகங்களை மூடுவதாக கூறியிருந்தது.
இந்த வணிகங்களில் இருந்து வரும் பணம் வெளிநாட்டினரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இது போன்ற சட்டவிரோத வணிகங்களை நிதி அமைச்சகம் தடுத்து நிறுத்தும் என தெரிவித்திருந்தது.
அதன்படி, வணிகத்தை வேறொருவரின் பெயரில் பதிவுசெய்த பிறகு, அவை வெளிநாட்டு குடிமக்களால் இயக்கப்படுகின்றன. இந்த வணிகத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தை அவர்கள் தங்கள் கணக்கில் வைப்பார்கள். இப்போது நாங்கள் அத்தகைய வணிகங்களை மூடிவிட்டு, அவற்றை நடத்தும் வெளிநாட்டினரை அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்புகிறோம். டிசம்பர் 2021 இல் மாலத்தீவில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என மாலத்தீவுகளின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் அலி இஹுசன் கூறியுள்ளார்.